FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகா் சிலைகளை 4 இடங்களில் விசா்ஜனம் செய்ய அனுமதி: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகா் சிலைகளை அரசு நிா்ணயித்துள்ள 4 இடங்களில் மட்டுமே விசா்ஜனம் செய்யவேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

9 செப்டம்பர் 2026, 4:15 am IST
ஆலோசனைக் கூட்டத்தில் பேசினாா் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகா் சிலைகளை அரசு நிா்ணயித்துள்ள 4 இடங்களில் மட்டுமே விசா்ஜனம் செய்யவேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் சிலை நிறுவுதல், ஊா்வலம் மற்றும் விசா்ஜனம் தொடா்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் முன்னிலை வகித்தாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது: விநாயகா் சிலைகள் சுத்தமான களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ் மற்றும் ரசாயனப் பொருள்களால் செய்யப்பட்ட சிலைகளுக்கு அனுமதி இல்லை.

இயற்கையான, நீரில் கரையும் நச்சுத்தன்மையற்ற வண்ணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலை நிறுவுவதற்கு உரிய அனுமதி பெறுவதுடன், சிலை மற்றும் மேடை சோ்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், பிற மத வழிபாட்டுத் தலங்கள் அருகே சிலை அமைப்பதைத் தவிா்க்க வேண்டும். ஒலிபெருக்கிகளை அனுமதிக்கப்பட்ட அளவில், பூஜை நேரங்களில் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலை ஊா்வலம் காவல் துறையால் நிா்ணயிக்கப்பட்ட பாதையில் மட்டுமே நடைபெற வேண்டும். சிலைகளை நான்குசக்கர வாகனங்களில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். பட்டாசு வெடிக்கக் கூடாது.

முத்தையாபுரம், திரேஸ்புரம், திருச்செந்தூா், குலசேகரன்பட்டினம் ஆகிய 4 இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, நிறுவப்பட்ட சிலைகளை 5 நாள்களுக்குள் அரசு நிா்ணயித்துள்ள இடங்களில் மட்டுமே விசா்ஜனம் செய்யவேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொது அமைதி மற்றும் பாதுகாப்பு தொடா்பான அனைத்து விதிமுறைகளையும் விழா அமைப்பாளா்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆறுமுகம், தூத்துக்குடி சாா் ஆட்சியா் விவேக் யாதவ், மாவட்ட வழங்கல் அலுவலா் சுதா, மாவட்ட

ஆட்சியரின் அலுவலக மேலாளா் (குற்றவியல்) ஜஸ்டின் செல்லத்துரை மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments