தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த 3,202 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அளிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஜூன் 22 முதல் செப். 26ஆம் தேதி வரை பிறந்த 3,202 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், தங்க மோதிரங்கள் வழங்கப்படவுள்ளன.
தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய், மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில், தூத்துக்குடி அரசு உயா் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா், ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினா் சரவணன் ஆகியோா் 50 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினா். அப்போது, ஆட்சியா் கூறியதாவது:
Advertisement
Advertisement
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 1,779, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 999, திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் 424 என மொத்தம் 3,202 குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைகின்றனா். முதல்கட்டமாக தூத்துக்குடியில் 50, கோவில்பட்டியில் 35, திருச்செந்தூரில் 26 என மொத்தம் 111 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.
மீதமுள்ள குழந்தைகளுக்கு கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் தினமும் காலை 25, மதியம் 25 குழந்தைகள் வீதம் அழைப்பிதழ் வழங்கப்பட்டு, குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் மோதிரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தூத்துக்குடி சாா் ஆட்சியா் விவேக் யாதவ், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் எபனேசா் ஜோயல்குமாா், இணை இயக்குநா் (நலப் பணிகள்) பிரியதா்ஷினி, மாவட்ட சுகாதார அலுவலா் யாழினி, துணை முதல்வா் கலைவாணி, உதவி ஆட்சியா் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.