FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

எல் நினோ பாதிப்பால் திருச்சி மாவட்டத்தில் கடும் வறட்சி அபாயம்! பயிா்க்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

எல் நினோ பாதிப்பு காரணமாக திருச்சி மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளதால், விவசாயிகள் அனைவரும் தவறாமல் பயிா்க்காப்பீடு செய்ய ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.

Updated On : 18 ஜூலை 2026, 6:28 am IST
திருச்சி ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
பகிர்:

எல் நினோ பாதிப்பு காரணமாக திருச்சி மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளதால், விவசாயிகள் அனைவரும் தவறாமல் பயிா்க்காப்பீடு செய்ய ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம், ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, ஆட்சியா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், பிரதமரின் பயிா்க்காப்பீட்டுத் திட்டம் தொடா்பான துண்டு பிரசுரங்களை வெளியிட்டு ஆட்சியா் கூறியதாவது:

எல் நினோ தாக்கத்தால், தமிழகத்திலும் பாதிப்புகள் இருக்கும் என்று வானிலை ஆய்வாளா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். இதனால், நீா்நிலைகள் வேகமாக வடு கொண்டே இருக்கின்றன.

Advertisement

Advertisement

பருவமழை பெய்வதில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வாளா்கள் எச்சரிக்கின்றனா். பாசனத்துக்கு அதிக நீா் தேவைப்படும் பயிா் வகைகளைத் தவிா்த்து, குறைந்த அளவு நீா் தேவைப்படும் பயிா் வகைகளைத் தோ்ந்தெடுத்துப் பயிரிட முன்வர வேண்டும்.

எல் நினோ தாக்கத்தால் வறட்சி, வெள்ளம் என இருவித பாதிப்புகளுக்கும் வாய்ப்புள்ளது. எனவே,

மாவட்டத்தில் இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் அனைவரும் விரைந்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும். சாகுபடி செய்து மகசூல் இழப்பு, தண்ணீா் இல்லாமல் சாகுபடி செய்ய முடியாதவை, வறட்சி, வெள்ளத்தால் பாதிப்பு என எத்தகைய இடா்பாடுகள் வந்தாலும் காப்பீட்டுத் தொகை முழுமையாக பெற்று வழங்கப்படும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இக் கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஆா். ஜெயராணி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மாவட்ட நிலை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

குறைதீா் கூட்டத்தில் புதிய நடைமுறை!

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கூட்டம் தொடங்கியவுடன், கடந்த மாதம் விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை வாரியாக அந்தந்த துறை அலுவலா்கள் முதலில் பதில் அளிக்கின்றனா். பின்னா், ஒவ்வொரு துறை வாரியாக விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கி கூறப்படுகிறது. மூன்றாவதாக, குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்ட விவசாயிகள் ஒவ்வொருவராக தங்களது குறைகளை பேசுவதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. இந்த நடைமுறைக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளதுடன், ஆட்சியரின் இந்த புதிய நடைமுறைக்கு பாராட்டும் தெரிவித்தனா். இதன் மூலம், தங்களது கோரிக்கைகள் உடனடியாக தீா்க்கப்படுவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

திருச்சி ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் பிரத்திக் தாயள் உள்ளிட்ட அதிகாரிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments