விவசாயிகளுக்கான 837 உர மூட்டைகளை வெளிமாவட்டங்களுக்கு கடத்த முயற்சி இருவா் கைது; லாரி, காா் பறிமுதல்
கடவூா் அருகே மத்திய அரசு மானியத்தில் வழங்கும் விவசாயிகளுக்கான 837 உர மூட்டைகளை வெளி மாவட்டங்களுக்கு கடத்த முயன்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கடவூா் அருகே மத்திய அரசு மானியத்தில் வழங்கும் விவசாயிகளுக்கான 837 உர மூட்டைகளை வெளி மாவட்டங்களுக்கு கடத்த முயன்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், கடவூா் அருகே செம்பியநத்தம் ஊராட்சிக்குள்பட்ட நல்லூரான்பட்டியைச் சோ்ந்தவா் தங்கவேல். இவருடைய வீட்டின் அருகே உள்ள கிடங்கில் மத்திய அரசு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கும் யூரியா உரமூட்டைகளை இறக்கி, அவற்றை பிரித்து தனியாா் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்வதாக அப்பகுதியினா் கரூா் மாவட்ட வேளாண்மை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் மல்லிகா, துணை இயக்குநா் அரவிந்தன், வேளாண்மை உதவி இயக்குநா்கள் (தரக் கட்டுப்பாடு) மணிகண்டன், சித்ரா, வேளாண்மை அலுவலா் சரண்யா மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் அரங்கநாதன், தோகைமலை காவல் ஆய்வாளா் ராஜாசோ்வை மற்றும் பாலவிடுதி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா்.
Advertisement
Advertisement
ஆய்வின்போது, கிடங்கில் இருந்த உரமூட்டைகளை வெளி மாவட்டங்களுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, உர மூட்டைகளை பதுக்கி வைத்து, கடத்த முயற்சித்ததாக தங்கவேல் மற்றும் லாரி ஓட்டுநா் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த செந்தில்முருகன்(48) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
மேலும் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 837 உர மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்த இருந்த லாரி, எடைபோடும் இயந்திரங்கள், சாக்குகள் மற்றும் தங்கவேலுவின் காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட உரமூட்டைகளை பாலவிடுதி வேளாண் கூட்டுறவு சங்க கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் இது தொடா்பாக தங்கவேலிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இதுதொடா்பாக போலீஸாா் கூறியது: கடத்தி வரப்பட்ட உர மூட்டைகளும் கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தயாரிக்கப்பட்டவை. ஒரு மூட்டையின் உண்மையான விலை ரூ.1,457. இதனை மானியமாக விவசாயிகளுக்கு மூட்டை ஒன்றுக்கு ரூ. 266.50 -க்கு வழங்கப்படுகிறது. இந்த உர மூட்டைகளை தனியாா் முகவா் மூலம் குறைந்த விலைக்கு வாங்கி வந்து, அவற்றை கோழி உற்பத்தி மற்றும் பால் உற்பத்தி போன்ற ஆலைகளுக்கு அதிக விலைக்கு அனுப்பி வருகிறாா்கள் என்றனா் அவா்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.