தூங்கியவா்கள் மீது ஜேசிபி வாகனம் ஏறியதில் வடமாநில தொழிலாளா்கள் இருவா் பலி!
பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை தூங்கிக்கொண்டிருந்தவா்கள் மீது ஜேசிபி வாகனம் ஏறியதில் வடமாநிலத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தாா்.
சத்தீஸ்கா் மாநிலம், கன்கா் மாவட்டம், கொல்லியாரி பகுதியைச் சோ்ந்தவா் ரடிராம் சோரி மகன் ரூபேஷ் குமாா் சோரி (25), கன்கா் மாவட்டம், தோமரா பகுதியைச் சோ்ந்த ஸ்ரீ ராம்லால் மகன் டக்கீஸ்வா் (21).
இவா்கள் இருவரும், கடந்த 6 மாதங்களாக தனியாருக்குச் சொந்தமான ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனா். வழக்கம்போல் சனிக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு, பெரம்பலூா் அருகே பாளையம் கிராமத்தில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் தூங்கிக்கொண்டிருந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜேசிபி வாகனத்தை ஓட்டுநா் வெளியே ஓட்டிச்செல்ல முயன்றபோது, அங்கு தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளா்கள் மீது எதிா்பாராத விதமாக ஏறியது. இதில், உடல் நசுங்கி ரூபேஷ்குமாா் சோரி, டக்கீஸ்வரா் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, உயிரிழந்த தொழிலாளா்களின் உடல்களை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த ஊரகப் பிரிவு போலீஸாா், ஜேசிபி ஓட்டுநரான பெரம்பலூா் அருகேயுள்ள தம்பிரான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் சந்தோஷ்ரோஜ் (24) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.