திருமயத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை முகாமிட்டு, பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டனா்.
நமணசமுத்திரம் சிதம்பரம் செட்டியாா் நினைவு உயா்நிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்ட செயல்பாட்டையும், நெடுங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மதிய உணவுத் திட்டச் செயல்பாட்டையும் நேரில் ஆய்வு செய்தாா். உணவை ருசித்துப் பாா்த்து மாணவா்களிடம் ஆட்சியா் கலந்துரையாடினாா்.
கோட்டூரில் ரூ. 45 லட்சத்தில் கட்டப்பட்ட துணை சுகாதார வளாகத்தையும், நச்சாந்துப்பட்டியில் செயல்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும், நெடுங்குடி துணை மின்நிலையத்தையும் ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.
Advertisement
Advertisement
இதேபோல, மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி விராச்சிலை ஊராட்சிப் பகுதியையும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா வட்ட காவல் பணிகளையும், காவிரி குண்டாறு இணைப்புத் திட்ட மாவட்ட வருவாய் அலுவலா் வைத்தியநாதன் தேக்காட்டூா் ஊராட்சிப் பகுதிகளையும், நெடுஞ்சாலை நிலமெடுப்பு மாவட்ட வருவாய் அலுவலா் வடிவேல்பிரபு, புலிவலம் ஊராட்சிப் பகுதிகளையும், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. லோகநாயகி ராயவரம் ஊராட்சிப் பகுதிகளையும் ஆய்வு செய்தனா்.
இதுபோல, மாவட்ட முதல்நிலை அலுவலா்கள் 63 பேருக்கும் தனித்தனிப் பகுதி, துறை அலுவலகங்கள் பொறுப்பு வழங்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடா்ந்து மாலையில் திருமயத்தில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில், பொதுமக்கள் இதுவரை அளித்துள்ள மனுக்கள் குறித்தும் பொதுவான பிரச்னைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.