‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் புதுகை மாவட்டத்தில் முதல் கட்டமாக 3,095 குழந்தைகளுக்கு வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் கட்டமாக 3,095 குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டத்தை மதுரையில் திங்கள்கிழமை முதல்வா் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து புதுக்கோட்டை அரசு ராணியாா் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா கலந்து கொண்டு 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்தாா். இதேபோல, அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
முதல் கட்டமாக மாவட்டம் முழுவதும் கணக்கெடுக்கப்பட்டு 3,095 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கிட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வரும் செப். 30-ஆம் தேதி வரை இதற்கான நிகழ்ச்சிகள் வரிசையாகத் திட்டமிடப்பட்டுள்ளன.
கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவிக்கப்படவுள்ளன. இதற்கான அழைப்பிதழ்களை அந்தந்தப் பகுதி சுகாதார செவிலியா்கள் தாய்மாா்களுக்கு நேரில் வழங்குவாா்கள். அழைப்பிதழ் பெற்றவா்கள் மட்டும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று தங்க மோதிரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களை மாவட்ட சுகாதார அலுவலா் அலுவலகத்தை 04322 221733 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு அறியலாம் என ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட இணை இயக்குநா் (சுகாதாரம்) சரவணன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மணி, மாவட்ட சுகாதார அலுவலா் வீ.சி. ஹேமச்சந்த் காந்தி, துணை இயக்குநா் (சுகாதாரம்) விஜயகுமாா், வருவாய்க் கோட்டாட்சியா் ஆ. பிரகாஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.