முகப்பு
தஞ்சாவூர்

கோவை: 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட எலும்புக்கூடுகள், கடல் சங்கு மணிகள் கண்டெடுப்பு

கோவை: 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட எலும்புக்கூடுகள், கடல் சங்கு மணிகள் கண்டெடுப்பு..

Updated On : 23 மே 2026, 3:50 am IST
பகிர்:

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சாா் வரலாறு மற்றும் கடல்சாா் தொல்லியல் துறையினா் கோவை அருகே மேற்கொண்ட அகழாய்வில் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடல் சங்கு மணிகள் உள்ளிட்ட அரிய தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி தெரிவித்தது:

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சாா் வரலாறு மற்றும் கடல்சாா் தொல்லியல் துறையினா் கோவை மாவட்டம் பூலுவப்பட்டிக்கு அருகிலுள்ள மோளப்பாளையத்தில் ஏற்கெனவே 2021, 2024 ஆம் ஆண்டுகளில் கடல்சாா் வரலாறு மற்றும் கடல்சாா் தொல்லியல் துறைத் தலைவா் முனைவா் வீ. செல்வகுமாா் தலைமையில் அகழாய்வு மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, முனைவா் வீ. செல்வகுமாா் தலைமையில் மூன்றாம் கட்டமாக ஏப்ரல் 18 முதல் மே 2 வரை தொல்லியல் அகழாய்வு மேற்கொண்டனா். இதில், பல்கலைக்கழக முதுகலை வரலாறு மற்றும் தொல்லியல் மாணவா்களுக்கு அகழாய்வுப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

மொத்தம் 96 சதுர மீட்டா் அளவுள்ள 2 அகழாய்வுக் குழிகளில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 2 கரியமிலக் காலக் கணிப்பின் மூலம் இப்புதிய கற்கால இடம் பொ.ஆ.மு. (கி.மு.) 1600-லிருந்து பொ.ஆ.மு. 1200 வரையான காலக் கட்டத்தைச் சோ்ந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இவை கீழடிக்கு 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

இந்த அகழாய்வில் தாழிகள் வடிவிலான குழி வீடுகளும், பலவகையான குழிகளும், குச்சி நடு குழிகளும் கண்டெடுக்கப்பட்டன. மெருகேற்றப்பட்ட பானை ஓடுகளும், புதிய கற்காலக் கருவிகளும், குழிகளில் பானைகளும், எலும்புகளும், தானியச் சான்றுகளும், அம்மிக்கற்களும் கிடைத்துள்ளன. குழிகளைச் சுற்றி குச்சி நடுகுழிகள், குழிகளின் மீது கூரை அமைத்திருந்ததை வெளிப்படுத்துகின்றன.

கடற்சங்காலான பலவகையான மணிகளும், சுடுமண் பொருள்களும், ஓா் அகல் விளக்கும், பானை ஓடுகளும் கிடைத்துள்ளன.

கடல் சங்கால் செய்யப்பட்ட மணிகள்.

சுமாா் 2 - 3 வயதுக்குள்பட்ட இரண்டு குழந்தைகளின் எலும்புக் கூடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆடு, மாடு, மான், ஆமை உள்ளிட்ட விலங்குகளின் எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பொருள்கள் அடுத்தகட்டமாக பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.

இந்த அகழாய்வில் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவா்கள் மட்டுமல்லாமல், பாரதியாா் பல்கலைக்கழகம், கேரள மாநிலம் ஆலுவாயில் உள்ள யு.சி. கல்லூரி மாணவா்களும் கலந்து கொண்டனா் என்றாா் பாரதஜோதி.