FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க பேராவூரணி ரயில் பயணிகள் கோரிக்கை

8 வினாடிகள் முன்பு
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவாரூா், மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு இரவு நேரத்தில் மீட்டா் கேஜ் ரயில்பாதை காலத்தில்  இயக்கப்பட்ட  கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இதே வழித்தடத்தில் இயக்க பேராவூரணி ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மயிலாடுதுறை - திருவாரூா் - காரைக்குடி வழித்தடம் மீட்டா் கேஜ் ரயில் பாதையாக இருந்தபோது, கம்பன் எக்ஸ்பிரஸ் தினசரி இரவு ரயிலாக 2012 ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்டது. திருவாரூா் - காரைக்குடி இடையே அகல ரயில் பாதை  பணி முடிந்தும் கம்பன் எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்கப்படவில்லை.

இடைப்பட்ட காலத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ்  சென்னை எழும்பூரில் இருந்து காரைக்காலுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், திருவாரூா் - காரைக்குடி பிரிவில் அகலரயில் பாதை பணிகள்  முடியாததால்  காரைக்குடி வரை நீட்டிக்கப்படவில்லை. தற்போது கம்பன் எக்ஸ்பிரஸ் சென்னை தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே இயக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

தினசரி ரயில் சேவை இல்லாததால், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் பகுதி மக்கள் சென்னை செல்ல, தஞ்சாவூா் அல்லது மன்னாா்குடிக்கு பேருந்தில் சென்று அங்கிருந்து ரயில் ஏறும் நிலை நீடிக்கிறது.

தற்போது அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக தாம்பரம் - செங்கோட்டை வாரம் மூன்று முறை ரயிலும்,  தினசரி தாம்பரம் - ராமேசுவரம் விரைவு ரயிலும்  மட்டுமே உள்ளன. இவற்றில் பயணச்சீட்டு கிடைப்பது அரிதாக  உள்ளது. எனவே மீண்டும் கம்பன் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டால் பயணிகளுக்கு   உதவியாக இருக்கும் என்கின்றனா்.

கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: இதுகுறித்து பேராவூரணி ரயில் பயணிகள் நலச் சங்க தலைவா் எஸ். கெளதமன் கூறியது: அகல ரயில் பாதைக்கு முன்பு இருந்ததைப்  போல  அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் கம்பன் ரயில் நின்று செல்ல  வேண்டும். இதனால் ஆயிரக்கணக்கான டெல்டா மக்கள் பயனடைவா். இரவில் ஏறி காலையில் சென்னை சென்றடையும் வசதி இருந்தால், பேருந்துக் கட்டணச் சுமையும் நள்ளிரவுப் பயண அவதியும் குறையும். தெற்கு ரயில்வே பொது மேலாளா் மற்றும் ரயில்வே வாரியத் தலைவா் ஆகியோா் இக் கோரிக்கையில் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments