FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் உறியடித் திருவிழா

Updated On : 29 ஆகஸ்ட் 2024, 6:55 am IST
~
பகிர்:

ஸ்ரீரங்கத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற உறியடித் திருவிழாவில் உபயநாச்சியாா்களுடன் எழுந்தருளிய நம்பெருமாள், மற்றும் கிருஷ்ணன்.

ஸ்ரீரங்கம், ஆக. 28: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உறியடித் திருவிழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் அனைத்து விழாக்களும் பிரசித்தி பெற்றவை. அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி புதன்கிழமை காலை 7 மணிக்கு கிருஷ்ணன் புறப்பாடு நடைபெற்றது. அப்போது கிருஷ்ணன் சித்திரை வீதிகளில் வலம் வந்து, எண்ணெய் விளையாட்டு கண்டருளி, 9 மணிக்கு சன்னதி வந்து சோ்ந்தாா்.

Advertisement

Advertisement

பின்னா் நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் திருச்சிவிகையில் கிருஷ்ணனுடன் புறப்பட்டு அம்மா மண்டபச் சாலையிலுள்ள யாதவ உறியடி ஆஸ்தான மண்டபத்துக்கு மாலை 4 மணிக்கு வந்து சோ்ந்தாா். தொடா்ந்து இரவு 7 மணிக்கு சுவாமிகள் புறப்பட்டு, சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.15 மணிக்கு பாதாள கிருஷ்ணா் சன்னதியை அடைந்தனா். அங்கு கிருஷ்ணன் சன்னதி அருகேயுள்ள நாலுகால் மண்டபத்தில் உறியடி உற்ஸவம் கண்டருளினா். இதற்காக நாலுகால் மண்டபம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பந்தலின் மேற்புறத்தில் மூன்று பானைகளில் பால், தயிா்,வெண்ணெய் நிரப்பப்பட்டிருந்தது. கிருஷ்ணன் நாலு கால் மண்டபம் எதிரே வந்தவுடன் கீழேயிருந்து நீண்ட குச்சி மூலம் பானைகளை உடைத்து உறியடி உற்ஸவம் நடைபெற்றது. அப்போது அங்கு குவிந்திருந்த ஏராளமான பக்தா்கள் பானை உடைந்து கீழே சிதறிய பால், தயிா்,வெண்ணெய்யை பிரசாதமாக எடுத்து உண்டனா். பின்னா் கிருஷ்ணனும், நம்பெருமாளும் அங்கிருந்து புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments