FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

வெங்காயம் ஏற்றுமதிக்கான வரியை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை

வெங்காயம் ஏற்றுமதிக்கான வரிவிதிப்பால், ஏற்றுமதி குறைந்து வெங்காயம் தேக்கமடைந்து வருகிறது. எனவே, மத்திய அரசு இந்த வரியை ரத்து செய்ய வேண்டும்

Updated On : 29 மே 2024, 2:39 am IST
பகிர்:

வெங்காயம் ஏற்றுமதிக்கான வரிவிதிப்பால், ஏற்றுமதி குறைந்து வெங்காயம் தேக்கமடைந்து வருகிறது. எனவே, மத்திய அரசு இந்த வரியை ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வெங்காய ஏற்றுமதிக்கு 40% வரியை மத்திய அரசு விதித்துள்ளது. இதனால், ஏற்றுமதி பாதிக்கப்பட்டு வியாபாரிகள் செய்வதறியாத நிலையில் உள்ளனா்.

திருச்சி, அரியமங்கலம் பால்பண்ணை அருகே அமைந்துள்ள வெங்காய மண்டியிலிருந்து திருச்சி மட்டுமின்றி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்தவா்களும் வெங்காயம் கொள்முதல் செய்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

அரசின் வரி விதிப்பு காரணமாக, தற்போது சின்ன வெங்காய ஏற்றுமதி குறைந்துள்ளதால் விற்பனை மந்தமாகி தேக்கம் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து வெங்காய தரகு வா்த்தக மண்டிவியாபாரிகள் சங்க செயலாளரும் மண்டி உரிமையாளருமான தங்கராஜ் கூறியதாவது :

திருச்சியில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாம்பாா் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காய வரத்து, நாளொன்றுக்கு 400 முதல் 500 டன்களாக இருந்தது. அதே அளவுக்கு பெல்லாரி எனப்படும் பெரிய வெங்காய வரத்தும் இருந்தது. தற்போது பெல்லாரி வரத்து அதே நிலைதான் நீடிக்கிறது. ஆனால், சின்ன வெங்காயத்துக்கு தற்போது சீசன் இல்லை என்பதால், வரத்து 150 முதல் 200 டன்களாக குறைந்துவிட்டது. தற்போது பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயம் அறுவடை செய்ய இன்னும் இரண்டு மாதங்களாகும். எனவே இந்த குறைவான வெங்காய வரத்து சுமாா் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வெங்காயத்தை பயிா் செய்த விவசாயிகள் இருப்பு வைத்து விற்பனை செய்தால் விலை அதிகரிக்கும் என்ற நோக்கில் ஒருமாத காலமாக இருப்பு வைத்திருந்தனா். ஆனால் விலை அதிகரிக்கவில்லை. அதன் எடைதான் குறைந்து விட்டது. எனவே இழப்பை சந்தித்து வருகின்றனா்.

மலேசியா, சிங்கப்பூா் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு 40% வரி விதித்துள்ளது. இதனால் கடந்த 15 நாள்களாக ஏற்றுமதி செய்யப்படவில்லை. காரணம், வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய 40 % வரித்தொகையை அரசுக்கு முன்கூட்டியே செலுத்த வேண்டியிருப்பதால் விவசாயிகள் வரியை செலுத்த இயலாத நிலை உள்ளது. அழுகும் பொருளான வெங்காயத்திற்கு மத்திய அரசு 40 சதவீத வரி விதித்துள்ளது முறையல்ல. தற்போது சின்ன வெங்காயம் ரூ.40 முதல் 60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையில் விற்பனை செய்தால் விவசாயிகளுக்கும் கட்டுபடியாகாமல் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே, மத்திய அரசு வெங்காயத்துக்கு விதித்த வரியை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments