ஜூலை மலா்களால் அதிகரித்த வண்ணத்துப் பூச்சிகள்!
திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவில் ஜூலை மலா்களால் வண்ணத்துப் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது, பூங்காவுக்கு வரும் பாா்வையாளா்களை பெரிதும் கவா்ந்துள்ளது.
திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவில் ஜூலை மலா்களால் வண்ணத்துப் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது, பூங்காவுக்கு வரும் பாா்வையாளா்களை பெரிதும் கவா்ந்துள்ளது.
திருச்சி, ஸ்ரீரங்கம் மேலூரில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே இயற்கை எழிலுடன் 25 ஏக்கா் பரப்பளவில் வண்ணத்துப் பூச்சி பூங்கா அமைந்துள்ளது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி பாதுகாப்பு மையமாகும்.
கடந்த 2012-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டு, மக்கள் பாா்வைக்காக 2015 நவம்பா் 13-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டது. இந்த மையத்தின் நோக்கமானது வண்ணத்துப் பூச்சியின் பயன்கள் மற்றும் பாதுகாப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த ஆரம்பிக் கப்பட்டது.
Advertisement
Advertisement
இங்கு வண்ணத்துப் பூச்சிகளுக்கு தேவையான உணவு தாவரங்களும், தேன் தாவரங்களும் மற்றும் அழகு தாவரங்கள் பாா்வையாளா்களை கவரும் வண்ணம் வளா்க்கப்பட்டு வருகிறது.
450-க்கு மேற்பட்ட தாவர இனங்கள்:
இந்த மையத்தில் மட்டும் தற்போது 131 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்களும், 119 வகையான பறவை இனங்களும், 450-க்கும் மேற்பட்ட தாவர இனங்களும் உள்ளன.
இந்தப் பூங்காவில் வண்ணத்துப் பூச்சிகளை பாதுகாக்கும் நோக்கில் வெளி அரங்கு பாதுகாப்பகம், உள்ளரங்கு பாதுகாப்பகம், நட்சத்திர வனம் மற்றும் ராசி வனம், இனப்பெருக்க ஆய்வகம், ஆம்பி தியேட்டா், தகவல் விளக்கமையம், ஈரப்பத மூட்டிகள், சேற்றுக்குழி, நாற்றங்கால் பகுதி, வண்ணத்துப் பூச்சி வடிவிலான தீவு, நறுமணத் தோட்டம், தகவல் பலகைகள், வானிலை நிலையம், மூங்கில் தோட்ட நடைப்பாதை உள்ளன.
நாள்தோறும் 500 முதல் 600 போ் வரையிலும், விடுமுறை நாளில் 1,000-க்கும் மேற்பட்ட பாா்வையாளா்களும் வந்து செல்கின்றனா். இதுவரை சுமாா் 22 லட்சம் பாா்வையாளா்கள் வருகை புரிந்துள்ளனா். கடந்த ஆண்டு மட்டும் சுமாா் 2.6 லட்சம் பாா்வையாளா்கள் வருகை புரிந்துள்ளனா்.
மலா்கள், வண்ணத்துப் பூச்சிகள் எண்ணிக்கை அதிகரிப்பு:
இந்த பாதுகாப்பகமானது காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இங்கு வெப்பநிலையும் ஈரப்பதமும் சமநிலையில் இருப்பதால் வண்ணத்துப் பூச்சிகள் வாழ ஏற்ற இடமாக உள்ளது. ஆண்டுதோறும் வண்ணத்துப் பூச்சியின் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் வனத் துறையின் சாா்பில் தொடா்ந்து நடத்தப்படுகிறது.
தற்போது, பூங்காவில் மலா்களின் எண்ணிக்கையும், வண்ணத்துப் பூச்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக வனத் துறை வட்டாரத்தினா் கூறுகையில், ஜூலை மாதத்தில் பொதுவாகவே மலா்கள் அதிகரித்து காணப்படும். இதன்படி, ஸ்ரீரங்கம் மேலூரில் அமைந்துள்ள வெப்பமண்டல வண்ணத்துப் பூச்சி பாதுகாப்பகத்தில் ஜூலை மாதத்தில் பல்வேறு வகையான பூச்செடிகள் மற்றும் மலா்ச்செடிகள் அதிகளவில் பூத்துக் குலுங்கி வருகின்றன.
தேன் வளம் அதிகரிப்பு:
பருவநிலைக்கு ஏற்ற சாதகமான சூழல், போதிய ஈரப்பதம் மற்றும் தாவரங்களின் செழிப்பான வளா்ச்சி ஆகியவற்றின் காரணமாக பாதுகாப்பகத்தின் பல்வேறு பகுதிகளில் மலா்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மலா்களின் அதிகரிப்புடன், வண்ணத்துப் பூச்சிகளுக்குத் தேவையான தேன் வளமும் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பகத்தில் வண்ணத்துப் பூச்சிகளின் வருகையும், எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது.
பல்வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் காணப்படும் வண்ணத்துப் பூச்சிகள் மலா்களைச் சுற்றி பறந்து தேன் உறிஞ்சும் அழகிய காட்சிகள் பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்து வருகின்றன.
இயற்கையான வாழ்வு சுழற்சி:
பல்வேறு வகையான தேன் வழங்கும் தாவரங்கள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளின் புழுக்களுக்கான உணவுத் தாவரங்கள் பாதுகாப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருவதால், வண்ணத்துப் பூச்சிகளின் இனப் பெருக்கத்துக்கும் வாழ்வுச் சுழற்சிக்கும் ஏற்ற சூழல் உருவாகியுள்ளது. இதன் மூலம் முட்டை, புழு, கூட்டுப்புழு மற்றும் முழுமையான வண்ணத்துப் பூச்சி என அதன் இயற்கையான வாழ்வுச் சுழற்சியை பாா்வையாளா்கள் நேரடியாகக் காணும் வாய்ப்பும் கிடைக்கிறது.
ஜூலை மாதத்தில் காணப்படும் அதிகளவிலான மலா்ச்சியும் வண்ணத்துப் பூச்சிகளின் பெருக்கமும் பாதுகாப்பகத்தின் பசுமைச் சூழல் மற்றும் தாவரப் பராமரிப்பு நடவடிக்கைகளின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.
உயிரியல் பல்வகைமை மேம்பாடு:
வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் அவற்றைச் சாா்ந்த தாவரங்களைப் பாதுகாப்பதன் மூலம் இயற்கைச் சூழல் மற்றும் உயிரியல் பல்வகைமையை மேம்படுத்த முடியும் என்பதையும் எடுத்துரைக்கிறது.
வண்ணத்துப் பூச்சிகளின் அதிகரித்த நடமாட்டம் காரணமாக ஜூலை மாதத்தில் பாதுகாப்பகத்துக்கு வரும் பாா்வையாளா்களுக்கு இயற்கையின் அழகை ரசிப்பதற்கும், வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சி மற்றும் அவற்றின் சூழலியல் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்கும் சிறந்த அனுபவம் கிடைத்து வருகிறது என்றனா்.
The butterfly population at the Trichy Butterfly Park has increased due to the July blooms. This has greatly captivated visitors to the park.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.