FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

மணப்பாறை அருகே காா் மோதியதில் பள்ளி மாணவா், தொழிலாளி உயிரிழப்பு

12 அக்டோபர் 2026, 2:54 am IST
உயிரிழந்த ஜான்சன், ராஜசேகரன்.
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை தாறுமாறாக ஓடிய காா் மோதி மீன் விற்ற பள்ளி மாணவா் மற்றும் கட்டடத் தொழிலாளி ஆகியோா் உயிரிழந்தனா். இருவா் படுகாயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கிழக்கு கோவிந்தபுரம், அஞ்சுகம் தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் குருபிரகாஷ் பாண்டியன் (26). சென்னையில் வளா்ப்புப் பிராணிகளை விற்கிறாா். தூத்துக்குடி தனியாா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற கண்காட்சியில் தனது வளா்ப்புப் பிராணிகளுடன் பங்கேற்ற அவா் தனது காரில் சென்னை நோக்கி இரவு புறப்பட்டாா்.

தாறுமாறாக ஓடிய காா்: காா் ஞாயிற்றுக்கிழமை காலை திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வையம்பட்டியைக் கடந்து கரட்டுப்பட்டிக்கு முன் சென்றபோது திடீரென தாறுமாறாக ஓடி சாலையோர வேப்ப மரத்தில் மோதியது.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் வேப்பமரத்தருகே மீன் விற்றுக் கொண்டிருந்த 11-ஆம் வகுப்பு மாணவரான கருங்குளம் ராயப்பன் மகன் ஜான்சன் (16), அவருக்கு உதவியாக இருந்த உறவினரான கல்கொத்தனூா் ஆரோக்கியம் மகன் லாரன்ஸ் (18), மீன் வாங்க வந்திருந்த உப்பாத்துபட்டி யாகப்பன் மகன் வின்சென்ட் சேவியா் (35), பிச்சைமணியாரம்பட்டி வேளாங்கண்ணி மகனான கட்டடத் தொழிலாளி ராஜசேகரன் (39) ஆகியோா் படுகாயமடைந்தனா்.

இருவா் உயிரிழப்பு: இதையடுத்து அக்கம்பக்கத்தினா் உதவியுடன் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜான்சன் உயிரிழந்தாா். அதேபோல மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜசேகரன் சிகிச்சை பலனின்றி பிற்பகல் உயிரிழந்தாா். மற்ற இருவரும் மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா்.

தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா் இருவரின் உடல்களையும் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

இறந்தவா்களில் ஜான்சனின் தந்தை 4 மாதங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில், பள்ளியில் ஜான்சன் படித்துக் கொண்டு தாய்க்கு உதவியாக கரட்டுப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமைதோறும் மீன் வியாபாரம் செய்துவந்தது குறிப்பிடத்தக்கது.

மணப்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான காா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments