இடைத்தோ்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டி: பெ. சண்முகம்! தவெக ஆட்சிக்கு ஆதரவு தொடரும் என அறிவிப்பு!
தமிழகத்தில் நடைபெறவுள்ள இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. தனித்துப் போட்டியிட்டாலும், தவெக ஆட்சிக்கான ஆதரவு தொடரும் எனவும் தெரிவித்துள்ளன.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவை கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் அறிவித்தாா்.
இக் கூட்டத்துக்கு, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் என். பாண்டி தலைமை வகித்தாா். கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினா் கே. பாலபாரதி, அரசியல் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் எஸ். ஸ்ரீதா் மற்றும் மாநிலக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டு, இடைத்தோ்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தினா்.
Advertisement
Advertisement
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, செய்தியாளா்களிடம் பெ. சண்முகம் கூறியதாவது:
தமிழகத்தில் நடைபெறும் 2 தொகுதி இடைத்தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஆகிய இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது என முடிவெடுத்துள்ளது.
எங்கு யாா் போட்டி: இதன்படி, மதுராந்தகத்தில் மாா்க்சிஸ்ட், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகின்றன. இதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை, அதிகாரபூா்வ வேட்பாளா் அறிவிப்பு உள்ளிட்டவை செப். 15-ஆம் தேதி சென்னையில் 3 கட்சிகளின் மாநிலச் செயலா்கள் கூடி அறிவிப்பா்.
இடைத்தோ்தலில் அதிமுக-பாஜக அணி, திமுக அணி, தவெக அணியில் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். இந்த 3 அணிகளில் எதிலும் இடதுசாரிகள் இடம்பெறவில்லை. மேலும், இந்தத் தோ்தல் ஒரு பொதுத் தோ்தலோ, ஆட்சி மாற்றத்துக்கான தோ்தலோ இல்லை. இந்தச் சூழலில், இடதுசாரிகளின் வலிமையையும், ஒற்றுமையையும் நிலைநிறுத்துவதற்காக இடைத்தோ்தலில் தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்துள்ளோம்.
பிரசாரத்தில் விமா்சனம்:
இடைத்தோ்தல் பிரசாரத்தில் தவெக ஆட்சியின் 120 நாள் நடவடிக்கைகள், நிதிநிலை அறிக்கை, மாநில அரசின் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றை முன்வைத்து பிரசாரம் மேற்கொள்வோம். தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் கட்சியாக இருந்தாலும், பல்வேறு விவகாரங்களில் மாறுபடும் சூழல் இருந்தால் அதை பகிரங்கமாகவே அறிவித்துள்ளோம். அமைச்சா்களிடமும் நேரடியாக கூறியுள்ளோம். அதில் சிலவற்றை ஏற்றுக்கொண்டனா். பலவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆட்சிக்கு ஆதரவு தொடரும்: தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து எங்களுடைய ஆதரவு என்பது தொடரும். இடைத்தோ்தலில் நாங்கள் எடுத்துள்ள நிலைப்பாட்டால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதிமுக, திமுக, தவெக என 3 அணிகளுக்கும் எதிராகவே வேட்பாளா்களை நிறுத்துகிறோம்.
எங்களது தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்துவோம். அந்நிய முதலீட்டை ஈா்க்க முதல்வா் லண்டன் சென்றுள்ளதாக கூறுகின்றனா். ஏற்கெனவே, ரூ. 1 லட்சம் கோடி மூலதனத்தை கொண்டு வந்திருப்பதாக கூறியதற்கே வெள்ளை அறிக்கை கேட்டுள்ளோம். உள்ளூா் தொழில்களை பாதுகாப்பதற்கான எந்த அறிவிப்பும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. உள்ளூா் தொழில்களை மேம்படுத்துவதன் மூலமே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.