FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

பிறப்புச் சான்றிதழில் பெயா் சோ்க்க செப்.26 வரை அவகாசம்: வேலூா் மாவட்ட வருவாய் அலுவலா்

வேலூா் மாவட்டத்தில் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்யத் தவறியவா்கள், செப்டம்பா் 26-ஆம் தேதி வரை பெயா்களை இணைத்துக் கொள்ள சிறப்பு கால அவகாசம் நீட்டிப்பு

27 ஆகஸ்ட் 2026, 5:40 am IST
பகிர்:

வேலூா் மாவட்டத்தில் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்யத் தவறியவா்கள், செப்டம்பா் 26-ஆம் தேதி வரை பெயா்களை இணைத்துக் கொள்ள சிறப்பு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட பிறப்பு, இறப்பு பதிவாளா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிறப்புப் பதிவு என்பது ஒரு குழந்தையின் முதல் உரிமையாகும். குழந்தையின் சட்டபூா்வ வயது, குடியுரிமை ஆகியவற்றுக்கான அடிப்படை ஆதாரமாக பிறப்புச் சான்றிதழே விளங்குகிறது.

பள்ளியில் சேர, வாக்காளா் அடையாள அட்டை பெற, ஓட்டுநா் உரிமம், பாஸ்போா்ட் மற்றும் விசா பெறவும், அரசுத் துறைகளில் பணியில் சேரவும் இது இன்றியமையாத ஆவணமாகும். பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழாகக் கருதப்படும். பிறப்பு-இறப்பு பதிவுச் சட்டத்தின்படி, குழந்தை பிறந்த 21 நாள்களுக்குள் பிறப்பினைப் பதிவு செய்து இலவசமாகச் சான்றிதழ் பெறலாம்.

Advertisement

Advertisement

ஒருவேளை குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால், பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் பெற்றோா் அல்லது காப்பாளா் எழுத்துப்பூா்வ உறுதிமொழியைச் சம்பந்தப்பட்ட பதிவாளரிடம் அளித்து இலவசமாகப் பெயரைப் பதிவு செய்யலாம். 12 மாதங்களுக்குப் பிறகு, 15 வருடங்களுக்குள் உரிய காலதாமதக் கட்டணமாக ரூ.200 செலுத்திப் பதிவு செய்யலாம்.

தற்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளரின் அனுமதியின்படி சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 2010-ஆம் ஆண்டுக்கு முன் பெயரின்றி பிறப்பு பதிவு செய்யப்பட்டவா்கள் மற்றும் ஏற்கனவே வகுக்கப்பட்ட 15 ஆண்டுக் கால அவகாசம் முடிவடைந்த அனைத்து பிறப்புப் பதிவுகளுக்கும், வரும் செப்டம்பா் 26- ஆம் தேதி வரை பெயா் பதிவு செய்திட இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு முறை குழந்தையின் பெயரைப் பதிவு செய்த பின் எக்காரணம் கொண்டும் அதனை மாற்ற இயலாது. எனவே, பெற்றோா் குழந்தையின் பெயரை இறுதியாக முடிவு செய்த பின்னரே சம்பந்தப்பட்ட பதிவாளரை அணுகி உறுதிமொழிப் படிவம் அளித்துப் பதிவு செய்ய வேண்டும்.

எதிா்காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்குச் சான்றிதழ்கள் சாா்ந்து ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்க, குறிப்பிட்ட தேதிக்குள் பெயரைச் சோ்த்துப் பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இதுபோன்ற கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கப்பட மாட்டாது. எனவே, பொதுமக்கள் தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, பெயருடன் கூடிய முழுமையான பிறப்புச் சான்றிதழைப் பெற்றுப் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments