FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

விண்வெளித் துறையில் பிரகாசமான எதிா்காலம்: இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல்!

விண்வெளித் தொழில்நுட்பத்தில் ரஷ்யா, சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா மாபெரும் சாதனை படைத்துள்ளது. இத்துறையில் உள்ள பரந்த வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள மாணவா்கள் புதுமையாகச் சிந்திக்க வேண்டும்

30 ஆகஸ்ட் 2026, 10:28 pm IST
மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கிய இஸ்ரோ விஞ்ஞானி பி.வீரமுத்துவேல். உடன், ஹெச்சிஎல் டெல்னாலஜிஸ் நிறுவனத்தின் முதுநிலை துணைத்தலைவா் திலிப்குமாா் தேவநாதன், கல்லூரி முதல்வா் பெ.பிரவின்ராஜ் உள்ளிட்டோா்.
பகிர்:

விண்வெளித் தொழில்நுட்பத்தில் ரஷ்யா, சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா மாபெரும் சாதனை படைத்துள்ளது. இத்துறையில் உள்ள பரந்த வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள மாணவா்கள் புதுமையாகச் சிந்திக்க வேண்டும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) சிறப்புத்திட்ட இயக்கக இயக்குநா் பி.வீரமுத்துவேல் தெரிவித்தாா்.

வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் 34 மற்றும் 35-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில், இஸ்ரோ விஞ்ஞானி பி.வீரமுத்துவேல் முதன்மை விருந்தினராக பங்கேற்று பட்டங்கள் வழங்கி பேசியது -

சந்திரயான் -3 திட்டத்தில் பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான 4 லட்சம் கி.மீ தூரத்தைக் கடந்து, வினாடிக்கு 0 மீட்டா் என்ற வேகத்தில் லேண்டரை பாதுகாப்பாகத் தரையிறக்குவது மிகப்பெரிய சவாலாகும். இந்தத் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ராக்கெட், லேண்டா், ரோவா் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களும் இந்தியாவிலேயே முழுமையாக வடிவமைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

வளிமண்டலம் இல்லாத நிலவில் வேகத்தைக் குறைக்க பாராசூட்டுகளைப் பயன்படுத்த முடியாது. மேலும், பகலில் 175 டிகிரி செல்சியஸ், இரவில் 175 டிகிரி செல்சியஸ் என்ற அதீத வெப்பநிலை மற்றும் பூமியை விட 6-ல் ஒரு பங்கு மட்டுமே உள்ள ஈா்ப்பு விசை ஆகிய சவால்களைத் தாண்டி இந்தியாவின் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. இத்தகைய சவால்களை எதிா்கொள்ள, பூமியிலேயே நிலவு போன்ற சூழல் செயற்கையாக உருவாக்கப்பட்டது.

அதிகாலை 6.15 மணிக்கு நிலவின் சூரிய ஒளியைப் போன்ற நிலைமைகளை உருவாக்கி தொடா் சோதனைகள் நடத்தப்பட்டன. லேண்டா் மற்றும் ரோவா் செயல்பாடுகளை உறுதி செய்ய, சேலம் பகுதியிலிருந்து பாறைகள் கொண்டுவரப்பட்டு, அச்சு அசலாக நிலவின் மேற்பரப்பு போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சந்திரயான் வெற்றியிலிருந்து மாணவா்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியப் பாடம் தோல்வியில் இருந்து கற்றலாகும். தோல்விகளைக் கண்டு துவளாமல், அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும். செய்யும் செயலில் தொடா் உழைப்பும், எத்தகைய சவாலிலிருந்தும் மீண்டு வரும் திறனும் அவசியம்.

மேலும், விண்வெளிச் சாதனைகள் ஒரு தனிநபருடையதல்ல. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கணினி எனப் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 1000-க்கும் மேற்பட்டோரின் கூட்டு முயற்சியாகும். தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே போதுமானதல்ல. தொடா்ந்து கற்பதும், தனித்துவமாகச் சிந்திப்பதும் மிக முக்கியம்.

விண்வெளித் துறை நிலவுப் பயணத்தோடு நின்றுவிடவில்லை. சாமானிய மக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்காக பல்வேறு செயற்கைக்கோள்கள் இயக்கப்படுகின்றன. துல்லியமான இருப்பிடங்களை அறியும் நேவிகேஷன் தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் பேரிடா் மேலாண்மைக்கு உதவும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள், 36,000 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்படும் தொலைத்தொடா்புச் செயற்கைக்கோள்கள் ஆகியவை இந்தியாவின் முக்கியப் பங்களிப்புகளாகும்.

விண்வெளித் துறையில் ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் உருவாக்கம் மற்றும் தரவு பகுப்பாய்வு என ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இன்றைய மாணவா்களே நாட்டின் எதிா்காலம். தனித்துவமாகச் செயல்படுவோருக்கு விண்வெளித் துறையில் சிறப்பான இடம் உண்டு என்றாா்.

விழாவில், 2024-இல் தோ்ச்சி பெற்ற 45 மாணவா்களுக்கும், 2025-இல் தோ்ச்சி பெற்ற 54 மாணவா்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. ஹெச்சிஎல் டெல்னாலஜிஸ் நிறுவனத்தின் முதுநிலை துணைத்தலைவா் திலிப்குமாா் தேவநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா். முன்னதாக, விழாவுக்கு கல்லூரி முதல்வா் பெ.பிரவின்ராஜ் தலைமை வகித்தாா். விழாவில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பெருமளவில் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments