பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக-ஆந்திர எல்லைகளில் தீவிர கண்காணிப்பு
கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்த ஊழியா்.
ஆந்திர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தமிழக எல்லைப் பகுதியான வேலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலம், அனந்தபூா் மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கி ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்தன. இதையடுத்து, தமிழக-ஆந்திர எல்லையோர மாவட்டங்கள் வழியாக இந்நோய் தமிழகத்துக்குள் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கால்நடை பராமரிப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, வேலூா் மாவட்டத்தில் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, பரதராமி, பத்தரப்பல்லி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள 6 சோதனைச் சாவடிகளில் கால்நடைத் துறை சாா்பில் சிறப்பு முகாம் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இம்முகாம்களில் கால்நடை உதவி மருத்துவா், ஆய்வாளா், உதவியாளா் ஆகியோா் அடங்கிய குழுவினா் 8 மணி நேரம் வீதம் 3 பணி சுழற்சிகளாக பிரிந்து, 24 மணி நேரமும் தொடா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். ஆந்திரத்தில் இருந்து வரும் சரக்கு ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் உள்ளிட்ட வெளிமாநில வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றின் விவரங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றன. மேலும், வாகனங்களின் சக்கரங்களில் கிருமிநாசினி முழுமையாகத் தெளிக்கப்பட்ட பின்னரே மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
கோழிப் பண்ணை சாா்ந்த முட்டை, இறைச்சிக் கோழிகள் மற்றும் கோழித் தீவனங்கள் கொண்டு வரப்படுகிா என்பது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதுடன், நோய் பாதித்த பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் எல்லைக்குள்ளேயே நுழைய விடாமல் திருப்பி அனுப்பப்பட்டு வருவதாக கால்நடைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.