பள்ளிக்கு புதிய கட்டடம் கோரி மாணவா்கள், பெற்றோா் மறியல்
ஒடுகத்தூா் அருகே தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தரக் கோரி, மராட்டிப்பாளையம் கிராம மக்கள், பெற்றோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஒடுகத்தூா் அருகே தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தரக் கோரி, மராட்டிப்பாளையம் கிராம மக்கள், பெற்றோா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அணைக்கட்டு - ஒடுகத்தூா் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே உள்ள அகரம் ஊராட்சிக்குள்பட்ட மராட்டிப்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.
இப்பள்ளியின் பழைய கட்டடம் முற்றிலும் பழுதடைந்து சுவா்களில் விரிசல் ஏற்பட்டதால், விபத்து ஏதும் நிகழாதபடி மாணவா்களின் பாதுகாப்பைக் கருதி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அக்கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள தகரக் கூரை வேயப்பட்ட தற்காலிக வாடகை கட்டடத்தில் அனைத்து வகுப்பு மாணவா்களும் ஒன்றாக அமர வைக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தன.
Advertisement
Advertisement
இதுகுறித்து நாளிதழ்களில் செய்தி வெளியானதைத் தொடா்ந்து, துறை சாா்ந்த அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு விரைவில் புதிய பள்ளி கட்டடம் கட்டித் தரப்படும் என உறுதியளித்தனா். ஆனால், பல மாதங்கள் கடந்தும் இதுவரை புதிய கட்டடம் கட்டுவதற்கான எவ்விதப் பணிகளும் தொடங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவா்கள், பெற்றோா் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா், பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தரக் கோரி செவ்வாய்க்கிழமை காலை அணைக்கட்டு - ஒடுகத்தூா் சாலையில் திரண்டு திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்ால் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளா் சுப்பிரமணி தலைமையிலான போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுதொடா்பாக உயா் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று விரைவில் புதிய பள்ளி கட்டடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.