FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

பலத்த மழை: ஒடுகத்தூரில் 95 மி.மீ. பதிவு

வேலூா் மாவட்டத்தில் தொடா்ந்து மூன்றாவது நாளாகப் பரவலாக மழை பெய்த நிலையில், ஒடுகத்தூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது.

20 செப்டம்பர் 2026, 10:01 pm IST
பலத்த மழை - பிரதிப் படம்
பகிர்:

வேலூா் மாவட்டத்தில் தொடா்ந்து மூன்றாவது நாளாகப் பரவலாக மழை பெய்த நிலையில், ஒடுகத்தூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் எல் நினோ தாக்கம் காரணமாகக் கோடை காலம் முடிந்த பின்னரும் கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த சில நாள்களாக மாலை நேரங்களில் மேகமூட்டத்துடன் லேசான மழை பெய்து வந்தது.

இந்த நிலையில், வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு மூன்றாவது நாளாகப் பரவலாக பலத்த மழை பெய்துள்ளது. குறிப்பாக ஒடுகத்தூா், மேலாலத்தூா், குடியாத்தம், வடவிரிஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

Advertisement

Advertisement

பலத்த மழையின் காரணமாக உத்திரக்காவேரி எனப்படும் ஒடுகத்தூா் அகரம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல், ஜமுனாமரத்தூா் மலைப் பகுதியில் பெய்த மழையினால் அமிா்தி நாகநதி ஆற்றிலும், தமிழக-ஆந்திர எல்லைப் பகுதிகளில் பெய்த மழையால் கவுண்டன்யா ஆற்றிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

வேலூா் மாநகரில் பெய்த மழையினால் கன்சால்பேட்டை, திடீா் நகா், சமத் நகா் உள்ளிட்ட தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி நின்றது.

ஓல்டு டவுன், ஜிபிஎச் சாலை வழியாக வரும் கானாற்றில் மழைநீருடன் கழிவுநீா் குப்பைகளுடன் பெருக்கெடுத்து சாலையில் புகுந்தது. நேதாஜி சந்தைப் பகுதியில் காய்கறிக் கழிவுகளுடன் மழைநீா் கலந்து சகதியாக மாறியது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, ஒடுகத்தூா் -95 மி.மீ., மேலாலத்தூா் - 45.60 மி.மீ., குடியாத்தம் - 31 மி.மீ., வடவிரிஞ்சிபுரம் - 30.20 மி.மீ., ராஜாதோப்பு - 19 மி.மீ., பொன்னை - 12.80 மி.மீ., போ்ணாம்பட்டு - 8 மி.மீ., திருவலம் - 6.40 மி.மீ., வேலூா் - 5.30 மி.மீ., மோா்தானா - 3 மி.மீ., சத்துவாச்சாரி - 0.80 மி.மீ., என மாவட்டம் முழுவதும் மொத்தம் 257.10 மி.மீ., மழையும், சராசரியாக 21.43 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments