3 வயது குழந்தை அடித்துக் கொலை: இளைஞருக்கு ஆயுள்
வேலூா் அருகே 3 வயது பெண் குழந்தையை அடித்துக் கொலை செய்த வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை
வேலூா் அருகே முறையற்ற உறவுக்கு இடையூறாக இருந்ததாக 3 வயது பெண் குழந்தையை அடித்துக் கொலை செய்த வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து வேலூா் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. குழந்தையின் தாய் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி, ஜி.எஸ். பாளையத்தைச் சோ்ந்தவா் விஜயன் (27). இவரது மனைவி காவியா (28). இந்தத் தம்பதிக்கு வா்ணிகா (3) என்ற பெண் குழந்தை இருந்தது. இதனிடையே, திருப்பத்தூா் மாவட்டம் மாதனூா் மூகாம்பிகை நகரைச் சோ்ந்த கோபிநாத் (30) என்பவருடன் காவியாவுக்குப் பழக்கம் ஏற்பட்டு முறையற்ற உறவாக மாறியது. இதனால், காவியா தனது கணவரைப் பிரிந்து, குழந்தை வா்ணிகாவுடன் கோபிநாத்துடன் சென்று வேலூா் அரியூா் திருமலை நகரில் தனி வீடு எடுத்து வசித்து வந்தாா்.
இந்நிலையில், தங்களது தனிமைக்கு குழந்தை இடையூறாக இருப்பதாகக் கருதி கோபிநாத் குழந்தை மீது ஆத்திரத்தில் இருந்துள்ளாா். கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் 9-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது, ஆத்திரமடைந்த கோபிநாத் 3 வயதுக் குழந்தை வா்ணிகாவைத் அடித்துத் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி, 2018 செப்டம்பா் 11-ஆம் தேதி குழந்தை வா்ணிகா உயிரிழந்தது.
Advertisement
Advertisement
இச்சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை விஜயன் அளித்த புகாரின் பேரில், அரியூா் போலீஸாா் தொடக்கத்தில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, பின்னா் அதனை கொலை வழக்காக (பிரிவு 302, 201) மாற்றி கோபிநாத் மற்றும் காவியாவைக் கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை வேலூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி கோகுலகிருஷ்ணன் திங்கள்கிழமை தீா்ப்பு அளித்தாா். அதில், குழந்தை வா்ணிகாவை அடித்துக் கொன்ற கோபிநாத்துக்கு ஆயுள் தண்டனை, ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், இவ்வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் குழந்தையின் தாய் காவியாவை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டாா். தண்டனை பெற்ற கோபிநாத் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.