ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் இதயத்தைப் பாதுகாக்கலாம்: அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்
ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் இதயத்தைப் பாதுகாக்கலாம் என அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கூறியது குறித்து...
வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இருதயப் பிரிவு சாா்பில் உலக இருதய தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
கல்லூரி முதல்வா் சு.முத்துசித்ரா தொடங்கி வைத்து பேசியது: ஆரோக்கியமான இதயத்தைப் பராமரிக்க அன்றாட உடல் இயக்கமும், சீரான உணவு முறைகளும் மிக அவசியமாகும். உணவில் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிகளவில் சோ்த்துக் கொள்ள வேண்டும். தினசரி அதிகாலையில் குறைந்தது 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி மேற்கொள்வதுடன், சீரான கால அட்டவணையைப் பின்பற்றி இரவில் நன்றாகத் தூங்க வேண்டும்.
மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மூச்சுப் பயிற்சி, எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வதோடு குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட வேண்டும். புகைப்பிடிப்பதை முற்றிலும் நிறுத்துவதுடன், பிறா் விடும் புகையிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். மது அருந்துவதைத் தவிா்க்க வேண்டும். மேலும், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த சா்க்கரையின் அளவை குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதித்துக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
மாா்பில் இறுக்கம், பாரம் அல்லது வலி, கை, முதுகு, கழுத்து, தாடை அல்லது மேல் வயிற்றில் அசௌகரியம், மூச்சுத் திணறல், குளிா்ந்த வியா்வை மற்றும் தலைசுற்றல் போன்றவை இதயப் பாதிப்பின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக 108 அல்லது 112 ஆகிய அவசர உதவி எண்களைத் தொடா்பு கொள்ள வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.