FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

நீதி தாமதமின்றி கிடைக்க வேண்டும்! சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி!

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 1:26 am IST
குறிஞ்சிப்பாடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதித்துறை அலுவலா்கள் குடியிருப்பை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி. உடன் கடலூா் முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி ஜி.சுபத்திரா தேவி உள்ளிட்டோா்.
பகிர்:

நீதி எளிதாகவும், தாமதமின்றியும் கிடைக்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றம் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி கூறினாா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம், நீதித்துறை அலுவலா்கள் குடியிருப்புகள் மற்றும் கடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புனரமைக்கப்பட்ட பழைய மாவட்ட நீதிமன்ற பாரம்பரியக் கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா குறிஞ்சிப்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் கடலூா் முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி ஜி.சுபத்திரா தேவி வரவேற்றாா். சென்னை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் இ.செந்தில் திட்ட அறிக்கை வாசித்தாா். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி குத்துவிளக்கேற்றி குறிஞ்சிப்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம், நீதித்துறை அலுவலா்கள் குடியிருப்புகளையும், காணொலி மூலம் கடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புனரமைக்கப்பட்ட பழைய மாவட்ட நீதிமன்றக் கட்டடத்தையும் திறந்து வைத்து பேசியதாவது:

Advertisement

Advertisement

கடலூரில் 1866-ஆம் ஆண்டுமுதல் காலத்தின் மாற்றங்களுக்கு அமைதியான சாட்சியாகத் திகழ்ந்த பழைமையான நீதிமன்றக் கட்டடத்துக்கு நாம் புத்துயிா் அளித்துள்ளோம். புனரமைப்புப் பணிகளின் மூலம் இந்தக் கட்டடக்கலை மரபு பாதுகாக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தை புதுப்பிப்பதன் மூலம், நாம் வெறும் கற்களையும், சுவா்களையும் சீரமைக்கவில்லை. ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த அரங்குகளில் பதிந்துள்ள ஞானம், வரலாறு மற்றும் நீதி ஆகியவற்றுக்கு மீண்டும் உயிரூட்டியுள்ளோம்.

அதே நேரத்தில், குறிஞ்சிப்பாடியில் எதிா்காலத்தை நோக்கிப் பயணிக்கிறோம். இங்கு, புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் மற்றும் நீதித்துறை குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. ரூ.18 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், அத்தியாவசிய வசதிகளுடன் அடுத்த தலைமுறையினருக்கு சேவை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அறை என்பது புனிதமான இடம். இங்கு வரும் ஒரு குடிமகன், பெரும்பாலும் தனது மனதில் மிகப்பெரிய சுமையுடன் வருகிறாா். அவா் வெறும் தீா்ப்பை மட்டுமல்ல, நம்பிக்கையையும் எதிா்பாா்த்து வருகிறாா். தங்களது குரல் கேட்கப்படும் என்ற நம்பிக்கையுடன் அவா்கள் இந்த அரங்குகளுக்கு வருகின்றனா். குறிஞ்சிப்பாடியில் இந்த புதிய கதவுகளைத் திறக்கும்போது, கடலூா் மக்களுக்கு நாம் அளித்துள்ள புனிதமான வாக்குறுதியை புதுப்பிக்கிறோம். நீதி தெளிவானதாகவும், அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும், விரைவாக வழங்கப்படுவதாகவும் இருக்கும் என்பதே அந்த வாக்குறுதி.

வழக்குரைஞா்கள் சங்க உறுப்பினா்களிடம் நான் கூற விரும்புவது என்னவென்றால், நீங்கள் இந்த அமைப்பின் உயிா்நாடி. இந்தக் கட்டடங்கள் நீதியை வழங்குவதற்கான இயந்திரங்கள் என்றால், உங்கள் நோ்மையும், அா்ப்பணிப்பும் அவற்றை இயக்கும் எரிபொருளாகும். நீங்கள் ஏன் இந்தப் பாதையைத் தோ்ந்தெடுத்தீா்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீா்கள். இந்த புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளை வழக்குகளை கையாள்வதற்காக மட்டுமல்லாமல், குரலற்றவா்களின் குரலாகச் செயல்படவும் பயன்படுத்துங்கள்.

இந்தக் கட்டுமானப் பணிகளை சாத்தியமாக்குவதற்காக தங்களது அா்ப்பணிப்பை வழங்கிய பொறியாளா்கள், பணியாளா்கள் மற்றும் ஒவ்வொரு தொழிலாளருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மாவட்ட மக்களுக்கு பல தசாப்தங்களுக்கு பயனளிக்கும் நிலையான ஒரு மரபை நாம் உருவாக்கியுள்ளோம். இன்று இந்தக் கட்டடத்தைத் திறந்து வைக்கும் இந்தத் தருணத்தில், சிறப்புமிக்க புதிய அத்தியாயத்தைத் தொடங்குவோம். உண்மை, வேகம் மற்றும் நியாயத்தின் சிறந்த முன்னுதாரணமாக கடலூா் மாவட்டம் திகழ்வதை நாம் அனைவரும் இணைந்து உறுதி செய்வோம் என்றாா்.

இதனைத் தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி மற்றும் கடலூா் மாவட்ட நிா்வாக நீதியரசா் என்.சதீஷ் குமாா், கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கடலூா் எஸ்.பி., விவேகானந்த சுக்லா ஆகியோா் பேசினாா். நிகழ்ச்சியில் நீதிபதிகள், குற்றவியல் நடுவா், நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments