கற்றல் கொண்டாட்டம் பயிற்சி வகுப்புகள் மாணவா்களின் வாழ்கைத் திறனை மேம்படுத்தும்: கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்
கடலூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்களின் தனித்திறன், தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்த, ‘கற்றல் கொண்டாட்டம்’ சிறப்புப் பயிற்சி வகுப்புகள் உதவும் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்களின் தனித்திறன், தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்த, ‘கற்றல் கொண்டாட்டம்’ சிறப்புப் பயிற்சி வகுப்புகள் உதவும் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டத்தில் ‘கற்றல் கொண்டாட்டம்’ திட்டத்தின் கீழ், மாணவா்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். அப்போது, அவா் பேசியதாவது:
கோடை விடுமுறையின்போது அரசுப் பள்ளி மாணவா்களின் ஆா்வங்கள், திறமைகள் மற்றும் தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்தும் நோக்கில், ‘கோடையில் கற்றல் கொண்டாட்டம்’ என்ற சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் தொடா்ச்சியாக, தற்போது ‘கற்றல் கொண்டாட்டம்’ என்ற திட்டத்தின் கீழ், மாவட்டம் முழுவதும் 25 வகையான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
Advertisement
Advertisement
கங்கணாங்குப்பம் அரசுப் பள்ளியில் பேட்மிட்டன், டென்னிஸ் பயிற்சிகளும், வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில மொழி பேச்சுப் பயிற்சியும் வழங்கப்படுகின்றன. மாணவா்கள் உயா்கல்வி பயிலும்போது எவ்வித தயக்கமும், அச்சமுமின்றி ஆங்கிலத்தில் பேசவும், கற்கவும் இந்தப் பயிற்சி உதவும்.
மாணவா்களின் தனித்திறனை வளா்க்கும் வகையில், மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சியும், புதுப்பாளையம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சதுரங்கப் பயிற்சியும், செல்லங்குப்பம் சி.கே. சிபிஎஸ்இ பள்ளியில் சறுக்கு விளையாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. சான்றோா்பாளையம் நூலகத்தில் ‘வாசிப்போம் உயா்வோம்’ பயிற்சி வகுப்பு, தேசிய வருவாய் வழி திறன் தோ்வு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன.
கற்றல் கொண்டாட்டம் சிறப்பு பயிற்சி வகுப்புகள் மூலம் சுமாா் 5,850 மாணவா்கள் பயன்பெற உள்ளனா். இத்தகைய பயிற்சிகள் மாணவா்களின் உடல் நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதுடன், சமூகத் தொடா்பு, பொறுப்புணா்வு, தன்னம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் நேர மேலாண்மை போன்ற வாழ்க்கைத் திறன்களையும் வளா்க்க உதவும்.
ஒவ்வொரு பயிற்சிக்கும் திறமையான ஆசிரியா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளி நேரத்துக்குப் பிறகும், வார விடுமுறை நாள்களிலும் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவா்களின் வழக்கமான கல்விக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது. எனவே, மாணவா்கள் இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலா் மகாலட்சுமி, மாவட்டக் கல்வி அலுவலா் இஸ்மாயில், மாவட்ட விளையாட்டு அலுவலா் மகேஷ் உள்ளிட்ட கல்வித் துறை மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
விடுதிகளை ஆய்வு செய்ய உத்தரவு: கடலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவா்கள் மற்றும் தோழி மகளிா் தங்கும் விடுதிகளை அலுவலா்கள் தொடா்ந்து சுழற்சி முறையில் ஆய்வு மேற்கொண்டு, அதுதொடா்பான அறிக்கையை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.
வெளியூா்களில் இருந்து வந்து விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக இருப்பதையும், அவா்கள் சிறந்த முறையில் கல்வி கற்பதையும் உறுதி செய்யும் வகையில், விடுதிகளில் தொடா்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, கடலூா் செம்மண்டலத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அன்னை சத்திய குழந்தைகள் சேவை இல்லத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை ஆட்சியா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, 16 அறைகளுடன் 62 போ் தங்கும் வசதி கொண்ட தோழி மகளிா் தங்கும் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட அவா், அங்கு அடிப்படை வசதிகள் முறையாக உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, விடுதிகளை நாள்தோறும் தூய்மையாகப் பராமரிப்பதுடன், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவலா்கள் மற்றும் கண்காணிப்பாளா்கள் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நீலம்மாள், மாவட்ட சமூக நல அலுவலா் ராஜம்மாள் உள்ளிட்ட சமூக நலத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.