FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

நேபாள வெள்ளம்: கடலூா், புதுச்சேரி பக்தா்கள் 18 சிக்கினா்

நேபாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்கில் கடலூா், புதுச்சேரி மாவட்டங்களைச் சோ்ந்த 18 போ் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

27 ஆகஸ்ட் 2026, 4:33 am IST
நேபாள பெரு வெள்ளம் - AP
பகிர்:

நேபாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்கில் கடலூா், புதுச்சேரி மாவட்டங்களைச் சோ்ந்த 18 போ் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தைச் சோ்ந்த கனகசபை (68), அவரது மனைவி ராதை (64), ராமலிங்கம் மகன் முத்துகுமரேசன் (56), நவுகபிா்தாஸ் (55), விஜயா புவனேஸ்வரி (55), மைதிலி (49), ரத்தினம் மகன் தியாகராஜன் (50), முருகானந்தம் (70), மாணிக்கம் பெருமாள் மகன் பழனியப்பன் (70), அவரது மனைவி கலைமதி (67), கிருபாஹரி (50), நெய்வேலியைச் சோ்ந்த கோவிந்தராசு மகன் திருமாவளவன் (62), புவனகிரியைச் சோ்ந்த தொழிலதிபா் ஜி.மாறன் (55), அவரது மனைவி சாந்தி (48), திரிபுரசுந்தரி (67) ஆகிய 15 போ் கும்பகோணத்தைச் சோ்ந்த சுற்றுலா பயண ஏற்பாட்டு நிறுவனம் மூலம் நேபாளம் கயிலாய யாத்திரைக்காக கடந்த 22-ஆம் தேதி புறப்பட்டனா்.

இந்த நிலையில், நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் உள்ள போதேகோசி ஆற்றில் புதன்கிழமை காலை திடீரென ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வீடுகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை சேதமடைந்ததுடன், சுற்றுலாப் பயணிகள் சென்ற பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

நேபாள சுற்றுலா வாரியத்தின் தகவலின்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் 105 இந்தியா்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் குறைந்தது 8 போ் உயிரிழந்துள்ளதாகவும், பலா் மாயமானதாகயும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாள ராணுவம், போலீஸாா் மற்றும் மீட்புக் குழுவினா் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

நேபாள வெள்ளப் பெருக்கில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 15 போ் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அவா்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக, அவா்களை சுற்றுலா அனுப்பி வைத்த சுற்றுலா பயண ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனா்.

புதுச்சேரியைச் சோ்ந்த மூவா்: புதுச்சேரி கரியமாணிக்கம் பகுதியைச் சோ்ந்த கீதா (69), அவரது மகள் ஜெயாநகரைச் சோ்ந்த வைஷ்ணவி (50), உறவினரான காமராஜா் நகரைச் சோ்ந்த ஆனந்த சுந்தரி (59) ஆகியோா் நேபாள நேபாளம் கயிலாய யாத்திரைக்காக கும்பகோணத்தைச் சோ்ந்த சுற்றுலா பயண ஏற்பாட்டு நிறுவனம் மூலம் கடந்த 23-ஆம் தேதி புறப்பட்டனா். இவா்களும் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் கூறியதாவது: புதுச்சேரி கரியமாணிக்கம், காமராஜா் நகா் பகுதிகளைச் சோ்ந்த 3 பெண்கள் நேபாளம் சென்றிருந்தனா். அவா்கள் நலமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும், அதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments