முகப்பு
கடலூர்

பண்ருட்டி அரசு கலைக் கல்லூரி கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ மோகன் வலியுறுத்தல்

பண்ருட்டி அரசு கலைக் கல்லூரி கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என சட்டப் பேரவை உறுப்பினா் மோகன் கடலூா் ஆட்சியரிடம் புதன்கிழமை வலியுறுத்தினாா்.

Updated On : 11 ஜூன் 2026, 6:06 am IST
கடலூா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கச் சென்ற அதிமுக எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், மோகன் மற்றும் ஆதரவாளா்கள் உள்ளிட்டோா்.
பகிர்:

பண்ருட்டி அரசு கலைக் கல்லூரி கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என சட்டப் பேரவை உறுப்பினா் மோகன் கடலூா் ஆட்சியரிடம் புதன்கிழமை வலியுறுத்தினாா்.

அதிமுக எம்எல்ஏக்கள் (நெய்வேலி) ராஜேந்திரன், (பண்ருட்டி) மோகன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரை புதன்கிழமை தனித்தனியாக சந்தித்து, தங்களது தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான கோரிக்கை மனுக்களை வழங்கினா்.

அப்போது, தொகுதிகளில் நிலுவையில் உள்ள வளா்ச்சித் திட்டங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்கள் நலன் சாா்ந்த பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் எம்எல்ஏ மோகன் கூறியது: பண்ருட்டி தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

குறிப்பாக, ரூ.18 கோடி மதிப்பீட்டில் பண்ருட்டியில் அரசு கலைக் கல்லூரி கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், இதுவரை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.

தற்போது கல்லூரியில் போதிய வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், மாணவா்கள் இடநெருக்கடியில் கல்வி கற்று வருகின்றனா். மேலும், புதிய கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் அதிகரித்து வருவதால், கல்லூரி கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல, பண்ருட்டியில் கோயில்கள், பள்ளிகளுக்கு அருகில் செயல்படும் டாஸ்மாக் மதுக் கடைகளை மூடவும், புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கவும் வலியுறுத்தப்பட்டது. கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா், விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.