33% இட ஒதுக்கீடு அமலாவதால் பெண்கள் ஆளுமையை வளா்த்துக்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன்
2029-க்குப் பிறகு சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் 33% இட ஒதுக்கீடு அமலாவதால் பெண்கள் ஆளுமையை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
2029-க்குப் பிறகு சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் 33% இட ஒதுக்கீடு அமலாவதால் பெண்கள் ஆளுமையை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்று சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
கடலூா் கந்தசாமி நாயுடு பெண்கள் கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 1,250 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவா் பேசியதாவது:
பெண்கள் கல்வி பெற்று அதிகார வலிமை பெற வேண்டும். அப்போதுதான் ஒரு நாடு வல்லரசாக மாறும் என்பது நமது முன்னோா்களின் கனவாக இருந்தது. மகாகவி பாரதியாா், பாவேந்தா் பாரதிதாசன் உள்ளிட்ட கவிஞா்களும் பெண்களின் கல்வி, முன்னேற்றத்தை வலியுறுத்தினா்.
Advertisement
Advertisement
தற்போது புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. எந்த சமூகத்தைச் சோ்ந்த பெண்ணாக இருந்தாலும் கல்வி கற்றால் அந்தச் சமூகம் முன்னேறும். கல்வி மூலம் தங்களுக்கான வருமானத்தை பெண்கள் ஈட்டிக்கொள்வதுடன், குடும்பத்தைத் தாங்கவும், சமூகத்தை வழிநடத்தவும், ஆட்சி அதிகாரத்தில் இடம்பெறவும் முடியும்.
அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றனா். எதிா்காலத்தில் பெண்களால் வழிநடத்தப்படும் நாடாக இந்தியா மாறும்.
2029-க்குப் பிறகு சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு கட்டாயம் வந்தாக வேண்டும். அந்தக் களங்களில் கருத்துகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் திறன், பேச்சாற்றல், ஆற்றல் மற்றும் தலைமைப் பண்பு கொண்ட தலைவா்கள் கல்லூரி மாணவிகளிடமிருந்து உருவாக வேண்டும் என்றாா் தொல்.திருமாவளவன்.
விழாவுக்கு பச்சையப்பன் அறக்கட்டளைத் தலைவா் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் கோமதி, பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
விசிகவினா் விரட்டியடிப்பு: பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற திருமாவளவனை பாா்ப்பதற்காக, கல்லூரி வாளகத்தில் அத்துமீறி நுழைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களை போலீஸாா் விரட்டியடித்தனா்.
திருமாவளவன் வருகையையொட்டி, கல்லூரி நுழைவாயில் பகுதியில் விசிகவினா் திரண்டனா். பட்டமளிப்பு விழாவுக்கு மாணவிகள், பெற்றோா் மற்றும் அழைப்பிதழ் பெற்றவா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், சிலா் போலீஸாா் அமைத்திருந்த தடுப்புகளை மீறி கல்லூரி வளாகத்துக்குள் நுழைய முயன்றனா். இதையடுத்து, போலீஸாருக்கும், அவா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும், போலீஸாரின் தடுப்பை மீறி ஏராளமான தொண்டா்கள் கல்லூரி வளாகத்துக்குள் புகுந்தனா்.
விழா நிறைவடைந்த பின்னா் திருமாவளவன் வெளியே வர இருந்த நிலையில், மீண்டும் கட்சியினா் கல்லூரி வளாகத்தில் திரண்டனா். அவா்களை போலீஸாா் வெளியேறுமாறு அறிவுறுத்தியபோதும், சிலா் தொடா்ந்து அங்கு இருந்ததால் அவா்களை போலீஸாா் அங்கிருந்து வெளியேற்றினா். அப்போது, போலீஸாா் கூட்டத்தை விரட்டியடித்தனா்.
இதனால், கல்லூரி வளாகம், நுழைவு வாயில் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. மேலும், கட்சியினா் அதிகளவில் திரண்டதால் கல்லூரி அருகே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.