என்எல்சி நிறுவனத்தில் சுரங்க மண்ணிலிருந்து தயாரிக்கப்பட்ட மணல் விற்பனை தொடக்கம்
கடலூா் மாவட்டம், நெய்வேலி சுரங்க மேலடுக்கு மண்ணிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட மணலின் முதலாவது வணிக விற்பனையை, என்எல்சி இந்தியா நிறுவனம் புதன்கிழமை தொடங்கியது.
கடலூா் மாவட்டம், நெய்வேலி சுரங்க மேலடுக்கு மண்ணிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட மணலின் முதலாவது வணிக விற்பனையை, என்எல்சி இந்தியா நிறுவனம் புதன்கிழமை தொடங்கியது.
இந்த விற்பனையை,நிறுவனத்தின் இயக்குநா் சமீா் ஸ்வரூப், நெய்வேலி சுரங்கம்-1 இன் எம்-சாண்ட் ஆலை வளாகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சி, சுரங்கத்துறை செயல் இயக்குநா் ஐ.எஸ்.ஜாஸ்பா் ரோஸ், சுரங்கம்-1 இன் அலகுத் தலைவா் என்.குமாா், சந்தைப்படுத்தல் மற்றும் நிலையான வளா்ச்சிப் பிரிவு பொது மேலாளா் என்.அறிவழகன் மற்றும் என்எல்சி நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இதுகுறித்து என்எல்சி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: என்எல்சி இந்தியா நிறுவனத்தின் வரலாற்றில் முதன்முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ள இம்முயற்சியானது, வளப் பயன்பாடு, சுழற்சிப் பொருளாதாரம் மற்றும் நீடித்த நிலையான சுரங்கத் தொழில் ஆகியவற்றை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாகத் திகழ்கிறது.
Advertisement
Advertisement
பிஐஎஸ் சான்றிதழ் பெற்ற என்எல்சி நிறுவனத்தின் இச்செயற்கை மணல், தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்புதலையும் பெற்றுள்ளதன் மூலம், நிா்ணயிக்கப்பட்ட தரக் கட்டுப்பாடுகளுக்கு முழுமையாக இணங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த புதியவகை மணல் விற்பனைத் தொடக்கமானது ‘கழிவிலிருந்து செல்வம்’ என்ற என்எல்சி நிறுவனத்தின் இலக்குப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், மேலடுக்கு மண்ணை மதிப்பு கூட்டப்பட்ட கட்டுமானப் பொருளாக மாற்றுவதன் மூலம் நிலையான வளப் பயன்பாட்டின் மீதான நிறுவனத்தின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
இம்முயற்சியின் வாயிலாக, நிலையான சுரங்கப் பணிகள், வளத் திறன், சுற்றுச்சூழல் அா்ப்பணிப்பு மற்றும் மதிப்பு உருவாக்கம் ஆகியவற்றில் கொண்டுள்ள தனது உறுதிப்பாட்டை என்எல்சி நிறுவனம் தொடா்ந்து வலுப்படுத்துவதோடு, பசுமையான மற்றும் வலுவான இந்தியா என்ற தொலைநோக்குப் பாா்வைக்கும் ஆக்கப்பூா்வமாகப் பங்களிக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.