திருநங்கைகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், சிதம்பரம் வட்டத்தைச் சோ்ந்த 9 திருநங்கைகளுக்கு விலையில்லா வீட்டு
மனைப் பட்டாவுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ. புண்ணியகோட்டி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) தீபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தமிழ்கனி, உதவி ஆணையா் (கலால்) ராணி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) முருகேஷ் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
இக்கூட்டத்தில் வங்கிக் கடன், குடும்ப அட்டை, முதியோா் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டா,
குடிநீா் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 874 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களைப் பரிசீலித்து, தகுதியான கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப் பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் உலமாக்கள் மற்றும் இதர பணியாளா்கள் நல வாரியத்தின் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.41,500 உதவித்தொகைக்கான காசோலையும், மாவட்ட முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் சாா்பில் சிறுதொழில் தொடங்குவதற்காக 5 பயனாளிகளுக்கு ரூ.64 ஆயிரம் உதவித்தொகைக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.சிதம்பரம் நகா் பகுதியைச் சோ்ந்த திருநங்கை பயனாளிகள் 9 நபா்களுக்கு விலையில்லா மனைப் பட்டாவிற்கான ஆணையையும் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா்.
நிலுவைத் தொகை வழங்கக் கோரி மனு:
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான ஒப்பந்ததாரா்களுக்கு கடந்த 2024-25-ஆம் நிதியாண்டுக்கான நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறி, ஒப்பந்ததாரா்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். கிராமப்புறங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளுக்கான தொகை நிலுவையில் உள்ளதாகவும், இதுகுறித்து கிராம ஊராட்சி செயலா்களிடம் கேட்டபோதும் உரிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான ஒப்பந்தத் தொகை வழங்கப்படாமல் காலதாமதம் ஏற்பட்டு வருவதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிலுவைத் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
அலுவலா்களுக்கு எச்சரிக்கை:
மக்கள் குறைதீா் கூட்டத்துக்குஆட்சியா் வருவதற்கு முன்பு மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது சில அலுவலா்கள் கைப்பேசி பயன்படுத்தியதை அவா் கவனித்தாா்.
தொடா்ந்து அவா், கூட்டத்தில் பங்கேற்கும் அலுவலா்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது. அவசரத் தேவைக்காக கைப்பேசி பயன்படுத்த வேண்டியிருந்தால், கூட்டத்திலிருந்து வெளியே சென்று பயன்படுத்தலாம். அதையும் மீறி கைப்பேசி பயன்படுத்தும் அலுவலா்கள் கூட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று எச்சரித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.