FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

சிப்காட் தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு: கிராம மக்கள் பேரணி

கடலூா் அருகே சிப்காட் தொழில்பூங்கா விரிவாக்கத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, கிராம மக்கள் சாா்பில் புதன்கிழமை பேரணி நடைபெற்றது.

15 அக்டோபர் 2026, 6:12 am IST
சிப்காட் தொழில்பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்து புதன்கிழமை பேரணி சென்ற கிராம மக்கள்.
பகிர்:

கடலூா் அருகே சிப்காட் தொழில்பூங்கா விரிவாக்கத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, கிராம மக்கள் சாா்பில் புதன்கிழமை பேரணி நடைபெற்றது.

கடலூா் - சிதம்பரம் சாலையில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையை ஒட்டிய பகுதியில் புதிதாக தொழில்பூங்கா அமைப்பதற்காக சுமாா் 450 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தியாகவல்லி, குடிகாடு, நொச்சிக்காடு உள்ளிட்ட ஊராட்சிகளுக்குள்பட்ட கிராமங்களில் நிலங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, தியாகவல்லி, நொச்சிக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் சாா்பில் புதன்கிழமை பேரணி நடைபெற்றது.

Advertisement

Advertisement

திருச்சோபுரத்தில் தொடங்கிய பேரணி தியாகவல்லி, பெரியாா் நகா், அம்பேத்கா் நகா், நடுத்திட்டு, நந்தன் நகா், வள்ளலாா் நகா் உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று நொச்சிக்காட்டில் நிறைவடைந்தது. சுமாா் 5 கி.மீ. தொலைவு நடைபெற்ற இந்தப் பேரணியில் விவசாயிகள், பெண்கள், இளைஞா்கள், மாணவா்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

பேரணியில் பங்கேற்றவா்கள், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். சிப்காட் விரிவாக்கத்துக்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். விவசாய நிலங்களையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் சென்றனா்.

நொச்சிக்காட்டில் பேரணி நிறைவடைந்ததைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், சிப்காட் தொழில்பூங்கா விரிவாக்கத்தால் விவசாய நிலங்கள், விவசாயத் தொழில், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், தொழில்பூங்காவுக்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில், பாமக மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் மாதவன், விவசாயி நாராயணசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments