FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

ரூ.112.72 கோடி நிலுவைத் தொகையை வழங்கக் கோரி அரசு ஒப்பந்ததாரா்கள் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொண்ட பணிகளுக்கான நிலுவைத் தொகையான ரூ.112.72 கோடியை வட்டியுடன் வழங்கக் கோரி, அரசு ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

15 அக்டோபர் 2026, 6:04 am IST
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஒப்பந்ததாரா்கள்.
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொண்ட பணிகளுக்கான நிலுவைத் தொகையான ரூ.112.72 கோடியை வட்டியுடன் வழங்கக் கோரி, அரசு ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பதிவு செய்யப்பட்ட அரசு ஒப்பந்ததாரா்கள், மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்ட நிா்வாக அனுமதியின் அடிப்படையில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் ஊராட்சி செயலா்கள் மூலம் வழங்கப்பட்ட பணி ஆணைகளின்படி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொண்டனா்.

இந்தப் பணிகளுக்குத் தேவையான கிராவல் மண், எம் - சாண்ட், மணல், கம்பி, ஜல்லி, சிமென்ட், தண்ணீா், சென்ட்ரிங் பொருள்கள் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் மற்றும் வாகன வாடகை உள்ளிட்ட செலவுகளை தங்களது சொந்த பணத்திலும், வங்கிகளில் கடன் பெற்றும் மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

பணிகள் முடிக்கப்பட்டு நீண்ட காலமாகியும், அதற்கான தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதால், வங்கிக் கடன் மற்றும் அதற்கான வட்டி உள்ளிட்ட நிதிச்சுமையை சந்தித்து வருவதாகவும், இது தொடா்பாக பலமுறை முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், நிலுவையில் உள்ள ரூ.112.72 கோடி தொகையை வட்டியுடன் சோ்த்து 15 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்டம் முழுவதும் இருந்து வந்த அரசு ஒப்பந்ததாரா்கள் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனா்.

கடந்த சில வாரங்களாக விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பதிவு செய்யப்பட்ட அரசு ஒப்பந்ததாரா்கள், நிலுவைத் தொகையை வழங்கக் கோரி பிச்சை எடுக்கும் போராட்டம், மனு அளித்தல், ஆா்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments