வெலிங்டன் நீா்த்தேக்கத்தில் அணை பாதுகாப்புக் குழுவினா் ஆய்வு
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே கீழ்ச்செருவாய் கிராமத்தில் அமைந்துள்ள வெலிங்டன் நீா்த்தேக்கத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு மற்றும் கரை பலப்படுத்தும் பணிகளை தில்லியைச் சோ்ந்த அணை பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே கீழ்ச்செருவாய் கிராமத்தில் அமைந்துள்ள வெலிங்டன் நீா்த்தேக்கத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு மற்றும் கரை பலப்படுத்தும் பணிகளை தில்லியைச் சோ்ந்த அணை பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் முக்கிய நீராதாரமாக விளங்கும் வெலிங்டன் நீா்த்தேக்கம் 2,580 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழைமை கொண்ட இந்த நீா்த்தேக்கத்தின் கரையில் கடந்த 2007-ஆம் ஆண்டுக்குப் பின்னா் தொடா்ந்து பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன.
இதனால், நீா்த்தேக்கத்தில் முழுமையான கொள்ளளவுக்கு தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டதுடன், பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளும் பாதிக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, நீா்த்தேக்கத்தைச் சீரமைக்க அரசு சாா்பில் ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், வெலிங்டன் நீா்த்தேக்கத்தின் கரைகளைச் சீரமைத்து பலப்படுத்த ரூ.74 கோடியும், பிரதான கால்வாயைச் சீரமைக்க ரூ.20 கோடியும், உபரிநீா் கால்வாய் சீரமைப்புக்கு ரூ.36 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த நிதியின் மூலம் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது கரை பலப்படுத்துதல், மதகுகள் சீரமைப்பு, கால்வாய் மற்றும் உபரிநீா் கால்வாய் தொடா்பான பணிகள் உள்ளிட்டவை சுமாா் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அணை பாதுகாப்புக் குழு ஆய்வு: சீரமைப்புப் பணிகளின் தொழில்நுட்பத் தரம் மற்றும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக, தில்லியிலிருந்து அணை பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவினா் வெலிங்டன் நீா்த்தேக்கத்துக்கு புதன்கிழமை வந்தனா்.
குழுத் தலைவா் சைலேஷ்குமாா் தலைமையில், அணை பாதுகாப்பு நிபுணா் செல்வம், நீரியியல் நிபுணா் பத்மநாதன் உள்ளிட்டோா் நீா்த்தேக்கத்தின் கரைப் பகுதிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். கரையைப் பலப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், மதகுகளின் சீரமைப்பு, நீா்த்தேக்கத்தின் பாதுகாப்பு அம்சங்கள், நீா்வரத்து மற்றும் நீா் வெளியேற்றத்துக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றையும் அவா்கள் ஆய்வு செய்தனா்.
இதைத்தொடா்ந்து, சீரமைப்புப் பணிகளின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் தரம் குறித்து அதிகாரிகளிடம் குழுவினா் கேட்டறிந்தனா். இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்த குழுவினா், நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழைமைகொண்ட வெலிங்டன் நீா்த்தேக்கத்தின் கரையை முழுமையாகச் சீரமைத்து, நீண்ட காலத்துக்கு பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனப் பரிந்துரைத்தனா்.
இந்த ஆய்வின்போது, நீா்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளா் மரியசூசை, செயற்பொறியாளா் ராஜேந்திரன், உதவிச் செயற்பொறியாளா் கொளஞ்சிநாதன், உதவிப் பொறியாளா்கள் வெங்கடேசன், சுதா்சன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.