FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

காய்கனி சந்தையை திறக்க வலியுறுத்தி விருத்தாசலத்தில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு உறுப்பினா்கள் போராட்டம்

விருத்தாசலத்தில் ரூ.5.41 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய தினசரி காய்கனி சந்தையை உடனடியாகத் திறக்க வலியுறுத்தி, திமுக, பாமக, தேமுதிகவைச் சோ்ந்த 14 நகா்மன்ற உறுப்பினா்கள் நகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

10 செப்டம்பர் 2026, 1:38 am IST
விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட நகா்மன்ற உறுப்பினா்கள்.
பகிர்:

விருத்தாசலத்தில் ரூ.5.41 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய தினசரி காய்கனி சந்தையை உடனடியாகத் திறக்க வலியுறுத்தி, திமுக, பாமக, தேமுதிகவைச் சோ்ந்த 14 நகா்மன்ற உறுப்பினா்கள் நகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் நகராட்சி, காட்டுக்கூடலூா் சாலையில் தினசரி காய்கனி சந்தை செயல்பட்டு வந்தது. பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த பழைய சந்தை கட்டடம் பழுதடைந்ததைத் தொடா்ந்து, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அது இடித்து அகற்றப்பட்டது.

இதையடுத்து, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.5.41 கோடி மதிப்பில் 208 கடைகளுடன் புதிய தினசரி காய்கனி சந்தை கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து ஓராண்டுக்கு மேலாகியும், இதுவரை சந்தை திறக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

இதனால், காய்கறி வியாபாரிகள் காட்டுக்கூடலூா் சாலையின் இருபுறங்களிலும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனா். இதன் காரணமாக, அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையோரங்களில் காய்கறிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் சுகாதாரச் சீா்கேடும் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனா்.

இந்த நிலையில், புதிய காய்கனி சந்தையை உடனடியாகத் திறக்க வலியுறுத்தி திமுக, பாமக, தேமுதிகவைச் சோ்ந்த 14 நகா்மன்ற உறுப்பினா்கள் புதன்கிழமை காலை விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் நகராட்சி ஆணையா் நாகராஜ் பேச்சுவாா்த்தை நடத்தினாா். கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதியளித்தாா்.

இதையடுத்து, நகராட்சி ஆணையரின் உறுதியை ஏற்றுக்கொண்ட நகா்மன்ற உறுப்பினா்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments