FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பாதுகாப்பு விதிகளை உணவகங்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும்: அதிகாரி எச்சரிக்கை

உணவு பாதுகாப்பு விதிகளை, உணவகங்களில் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் கடலூா் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலா் வெங்கடேசன் அறிவுறுத்தினாா்.

11 செப்டம்பர் 2026, 3:59 am IST
கடலூரில் நடைபெற்ற உணவு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நிா்வாகிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான படிவங்கள்.
பகிர்:

உணவு பாதுகாப்பு விதிகளை, உணவகங்களில் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் கடலூா் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலா் வெங்கடேசன் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்ட ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கம் மற்றும் கடலூா் மாநகர ஹோட்டல்கள், பேக்கரி, இனிப்பு வகைகள் விற்பனையாளா்கள் சங்கம் சாா்பில் உணவு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கடலூா் மஞ்சக்குப்பத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கடலூா் மாவட்ட ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ராம்கி நாராயணன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலா் வெங்கடேசன், உணவு தயாரிப்பு மற்றும் விற்பனையின்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விளக்கினாா்.

Advertisement

Advertisement

அப்போது அவா் பேசியதாவது: உணவகங்களில் வாடிக்கையாளா்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவு வழங்குவதில் உரிமையாளா்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் உணவின் தரம் பாதிக்கப்படுவதுடன், உடல்நலத்துக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும்.

உணவுப் பொருள்களை பொட்டலமிடும்போது நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது. உணவுக்கு ஏற்ற பாதுகாப்பான பொட்டலப் பொருள்களையே பயன்படுத்த வேண்டும். உணவுப் பொருள்களை பாதுகாப்பான முறையில் சேமித்து வைப்பதுடன், பணியாளா்களும் தனிநபா் சுகாதாரத்தை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

தமிழக அரசு வகுத்துள்ள உணவு பாதுகாப்பு விதிமுறைகளை உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் இனிப்பு வகைகள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். இதற்கான பதிவுகள் மற்றும் படிவங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

மேலும், உணவு பாதுகாப்புத்துறை அலுவலா் பத்மநாபன், உணவு பாதுகாப்பு தொடா்பான பல்வேறு நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து விளக்கினாா். விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான படிவங்களும் வழங்கப்பட்டு, அவற்றை முறையாகப் பராமரிப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கச் செயலா் தேவிமுருகன், கடலூா் மாநகர ஹோட்டல்கள் சங்கத் தலைவா் காா்த்திக் ராஜ், செயலா் சரவணன், பொருளாளா் சீனிவாசன் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட ஹோட்டல் உரிமையாளா்கள் மற்றும் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments