FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

புரட்டாசி ஞாயிறு: கடலூரில் மீன்களின் விலை குறைவு

21 செப்டம்பர் 2026, 12:51 am IST
கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமை வந்திருந்த பொதுமக்கள், வியாபாரிகள்.
பகிர்:

புரட்டாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை வழக்கத்தைவிட சற்று குறைந்து காணப்பட்டது.

கடலூா் மாவட்ட வங்கக் கடலோரத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களைச் சோ்ந்தவா்கள் மீன் பிடி தொழில் மற்றும் அதைச் சாா்ந்த தொழிலை செய்து வருகின்றனா். மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மீன் பிடி விசைப்படகுகள், 2,000-க்கும் மேற்பட்ட பைபா் படகுகளைக் கொண்டு மீன் பிடி தொழில் செய்யப்படுகிறது.

கடலூா் கடல் பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் சுவை மிக்கவை. இதனால், வழக்கமான நாள்களில் கடலூா் மீன்பிடி துறைமுகம் பகுதியில் அதிகாலை 3 மணி முதலே மீன்கள் ஏலம் மற்றும் விற்பனை தொடங்கிவிடும். ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவும், மீன்களின் விலை உயா்ந்தும் காணப்படும்.

Advertisement

Advertisement

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை கடலுக்குச் சென்று திரும்பிய விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளில் கொண்டுவரப்பட்ட மீன்கள் துறைமுகத்தில் ஏலம் விடப்பட்டன. பல்வேறு வகையான கடல் மீன்கள் விற்பனைக்கு வந்திருந்த நிலையில், புரட்டாசி மாதம் என்பதால், சில மீன் வகைகளின் விலையில் சற்று சரிவு காணப்பட்டது.

கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.1,200-க்கு விற்பனையான வஞ்சிரம் மீன், ஞாயிற்றுக்கிழமை விலை குறைந்து ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல, இறால் ரூ.500, கனவா ரூ.200, பண்ணி சாத்தான் ரூ.400, வவ்வால் ரூ.600, கானாங்கெளுத்தி ரூ.150, நண்டு ரூ.300, சீலா ரூ.400, சங்கரா ரூ.350, நெத்திலி ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது.

துறைமுகத்துக்கு மீன்களின் வரத்து, மீன்களின் தரம், கடல் நிலவரம் மற்றும் அன்றைய சந்தை தேவையைப் பொறுத்து விலையில் மாற்றம் ஏற்படும் என மீன் வியாபாரிகள் தெரிவித்தனா்.

புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால், பொதுமக்களின் மீன் நுகா்வு குறைவது உள்ளிட்ட காரணங்களால், ஞாயிற்றுக்கிழமை சில வகை மீன்களின் விலை சற்று குறைந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா். இதனால், மீன் வாங்க வந்த பொதுமக்களுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் சில வகை மீன்கள் குறைந்த விலையில் கிடைத்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments