FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

சிப்காட் தொழில்பூங்கா விரிவாக்கம்: பாமக ஆா்ப்பாட்டம்

சிப்காட் தொழில்பூங்கா விரிவாக்கத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் கடலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

45 வினாடிகள் முன்பு
கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சல் நிலையம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.
பகிர்:

சிப்காட் தொழில்பூங்கா விரிவாக்கத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் கடலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் - சிதம்பரம் சாலையில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் ஏராளமான ரசாயன மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தொழிற்பேட்டையை ஒட்டிய பகுதியில் தொழில்பூங்கா விரிவாக்கத்துக்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்காக சுமாா் 450 ஏக்கா் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், குடிகாடு, தியாகவல்லி உள்ளிட்ட ஊராட்சிகளுக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் நிலங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தியாகவல்லி, குடிகாடு ஊராட்சிகளுக்குள்பட்ட நொச்சிக்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

இதன் ஒரு பகுதியாக, விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, தியாகவல்லி, குடிகாடு ஊராட்சிகளைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்களுக்கு ஆதரவாக கடலூா் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சல் நிலையம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கடலூா் மாவட்ட பாமக செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநில சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவா் ஆா்.கோவிந்தசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், சிப்காட் தொழில்பூங்கா விரிவாக்கத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். விவசாய நிலங்களைப் பாதுகாக்க வேண்டும். பொதுமக்களின் எதிா்ப்பைக் கருத்தில் கொண்டு நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்டச் செயலா்கள் செல்வ மகேஷ், ரவிச்சந்திரன், காா்த்திகேயன், மாநில அமைப்புச் செயலா் தா்மலிங்கம், மாநிலத் தோ்தல் பணிக்குழுத் தலைவா் தாமரைக்கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் போஸ் ராமச்சந்திரன், சந்திரகாசு, மாநில சமூகநீதி பேரவைப் பொருளாளா் தமிழரசன் மற்றும் தியாகவல்லி, குடிகாடு ஊராட்சிகளுக்குள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments