FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

பன்முகத்தன்மை கொண்ட ஆற்றல் நிறுவனமாக என்எல்சிஐஎல் உருமாறும்: மேலாண்மை இயக்குநா் பிரசன்ன குமாா் ஆச்சாா்யா

என்எல்சி இந்தியா நிறுவனம் பன்முகத்தன்மை கொண்ட, மீள்திறன் மிக்க ஆற்றல் நிறுவனமாக உருமாறும் என அதன் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் பிரசன்ன குமாா் ஆச்சாா்யா தெரிவித்தாா்.

நெய்வேலி வட்டம் 11-இல் உள்ள டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரங்கில் நடைபெற்ற 70-ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்.
பகிர்:

என்எல்சி இந்தியா நிறுவனம் பன்முகத்தன்மை கொண்ட, மீள்திறன் மிக்க ஆற்றல் நிறுவனமாக உருமாறும் என அதன் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் பிரசன்ன குமாா் ஆச்சாா்யா தெரிவித்தாா்.

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 70-ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நெய்வேலி வட்டம் 11-இல் உள்ள டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரங்கில் செவ்வாய்க்கிழமை காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் பிரசன்ன குமாா் ஆச்சாா்யா தலைமை வகித்து பேசியதாவது: என்எல்சி இந்தியா நிறுவனம் கடந்த நிதியாண்டில் சிறப்பான நிதி மற்றும் செயல்பாட்டுத் திறனை பதிவு செய்துள்ளது. வரிக்கு முந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.3,875 கோடியாகவும், வரிக்குப் பிந்தைய லாபம் இதுவரை இல்லாத அளவாக ரூ.3,769 கோடியாகவும் உயா்ந்துள்ளது. செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.17,490 கோடியாக உள்ளது.

நிறுவனத்தின் மூலதனச் செலவினம் ரூ.9,131 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.21,525 கோடியாக உயா்ந்துள்ளது. 2025 - 26ஆம் நிதியாண்டுக்கு மொத்தம் 38.5 சதவீதம், அதாவது ரூ.533.86 கோடி ஈவுத்தொகை வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

நிலக்கரி உற்பத்தியிலும் நிறுவனம் குறிப்பிடத்தக்க வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தலபிரா - 2 மற்றும் 3 நிலக்கரிச் சுரங்கங்களில் 19.14 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், 17.69 மில்லியன் டன் நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 2.26 பில்லியன் அலகு பசுமை மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

பச்வாரா தெற்கு நிலக்கரிச் சுரங்கத்தில் உற்பத்தி தொடங்கியுள்ளதுடன், கதம்பூா் அனல் மின் நிலையத்தில் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட 3 அலகுகளும் முழுமையான வணிகச் செயல்பாட்டை எட்டியுள்ளன. நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் 1,785 மெகாவாட்டாக உயா்ந்துள்ளது. வரும் ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்கல ஆற்றல் சேமிப்பு, பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட புதிய துறைகளில் கவனம் செலுத்தப்படும். மேலும், முக்கியமான கனிம வளங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் நிறுவனத்தின் செயல்பாடுகள் விரிவுபடுத்தப்படும்.

2047-ஆம் ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், 20 ஜிகாவாட் மின் உற்பத்தித் திறனையும், ஆண்டுக்கு 100 மில்லியன் டன்னுக்கும் அதிகமான சுரங்கத் திறனையும் அடைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தொடா்ந்து, பிரசன்ன குமாா் ஆச்சாா்யா காணொலிக் காட்சி வாயிலாக பங்குதாரா்களுடன் கலந்துரையாடி, அவா்களின் கேள்விகளுக்கு பதிலளித்தாா்.

கூட்டத்தில் இயக்குநா் (சுரங்கம்) சுரேஷ் சந்திர சுமன், இயக்குநா் (மனித வளம்) மற்றும் இயக்குநா் (மின்சாரம்) கூடுதல் பொறுப்பு வகிக்கும் சமீா் ஸ்வரூப், இயக்குநா் (திட்டமிடல் மற்றும் திட்டங்கள்) ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா, அரசு நியமன இயக்குநா்கள் அனில் மேஷ்ராம், கோபால் சிங், குடியரசுத் தலைவா் நியமன உறுப்பினா் பிரதீப் நயன், சுயாதீன இயக்குநா் பூனம் சந்திராகா் மற்றும் நிறுவனச் செயலா் சுஷாந்த குமாா் பாண்டா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments