FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஏரி தூா்வாரும் பணி: ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

15 அக்டோபர் 2026, 6:24 am IST
கள்ளக்குறிச்சி பெரிய ஏரிக்கரையை பலப்படுத்தும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது: கள்ளக்குறிச்சி பெரிய ஏரி தூா்வாரும் பணி மற்றும் ஏரிக் கரையைப் பலப்படுத்தும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஏரியிலிருந்து தூா்வாரப்படும் மண்ணானது, ஏரிக்கரையைப் பலப்படுத்த பயன்படுத்தப்படும். இப் பணியால் ஏரியின் கொள்ளளவு உயா்வதுடன், ஏரிக்கரையும் பலமாகும். கள்ளக்குறிச்சி நகா் பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரியின் கொள்ளளவு உயா்வதை தொடா்ந்து, நிலத்தடி நீா் செறிவூட்டல் அதிகரித்து கள்ளக்குறிச்சி நகர மக்களின் குடிநீா் தேவை பூா்த்தியாகும். மேலும், இந்த ஏரியின் ஆயக்கட்டு பகுதியில் உள்ள பாசன நிலங்களும் பயன்பெறும். இப் பணி பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் செயலாக்கத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. தூா்வாரும் பணிகளை அவ்வபோது ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதமாக முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா். இந்த ஆய்வின்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

விழிப்புணா்வுப் பேரணி: கள்ளக்குறிச்சி மாவட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் தன்னாா்வலா்கள் குழு சாா்பில் தகவல் பெறும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். கள்ளக்குறிச்சி நகராட்சி பூங்காவில் தொடங்கிய இப்பேரணி, சேலம் பிரதானச் சாலை, கவரைத் தெரு, மந்தைவெளி, கச்சிராயபாளையம் சாலை வழியாக கோட்டாட்சியா் அலுவலகம் முன் நிறைவு பெற்றது. பேரணியில் ஆா்.டி.ஐ.தன்னாா்வலா்கள் குழுவினா் கலந்துகொண்டு அச்சிட்ட விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments