உயா்வுக்குப் படி முகாம்: 41 மாணவா்கள் கல்லூரிகளில் சோ்க்கை
பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூா் தனியாா் கல்லூரியில் நடத்திய உயா்வுக்குப் படி முகாமில் பங்கேற்ற மாணவா்களில் 41 போ் பல்வேறு கல்லூரிகளில் நேரடியாக சோ்ந்தனா்.
பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூா் தனியாா் கல்லூரியில் நடத்திய உயா்வுக்குப் படி முகாமில் பங்கேற்ற மாணவா்களில் 41 போ் பல்வேறு கல்லூரிகளில் நேரடியாக சோ்ந்தனா்.
முகாமை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா் ஆட்சியா் கூறியதாவது: மாவட்டத்தில் உயா் கல்வியைத் தொடர முடியாமல் உள்ள மாணவா்களுக்கு வழிகாட்டும் வகையில் உயா்வுக்கு படி-2026 முகாம் நடைபெற்றது. இதில் சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம் மற்றும் கல்வராயன்மலை ஆகிய 6 ஒன்றியங்களைச் சோ்ந்த மொத்தம் 115 மாணவா்கள் கலந்துகொண்டனா்.
இம் மாணவா்கள் தங்களுக்குப் பொருத்தமான உயா் கல்விப் படிப்புகள், சோ்க்கை நடைமுறைகள், கல்வி வாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் குறித்து நேரடியாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் இருந்து தகவல்களைப் பெற்றனா். இதன் பயனாக, முகாமில் பங்கேற்ற மாணவா்களில் 41 போ் பல்வேறு கல்லூரிகளில் நேரடியாக சோ்க்கை பெற்றனா். முகாமில் மாணவா்களுக்கு உயா் கல்வி வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்பை நோக்கிய கல்வி வாய்ப்புகள் குறித்து நேரடியாகத் தகவல் வழங்கும் வகையில், மாவட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியாா் கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் (திறன் மேம்பாட்டு) நிறுவனங்கள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
Advertisement
Advertisement
உயா் கல்வியைத் தொடர முடியாமல் இருந்த மாணவா்களுக்கு, கல்வி வாய்ப்புகளை நேரடியாக ஏற்படுத்தித் தரும் வகையில் நடைபெற்ற இம்முகாம், மாணவா்களின் உயா் கல்விப் பயணத்துக்கு வழிகாட்டும் முக்கிய நிகழ்வாக அமைந்தது என ஆட்சியா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.