முகப்பு
புதுச்சேரி

புதுவைப் பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தலைவர்கள்!

புதுவைப் பேரவைத் தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தலைவர்கள் குறித்து...

Updated On : 5 மே 2026, 9:11 am IST
வெ. வைத்திலிங்கம் - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட அரசியல் தலைவா்கள் பலரும் வெற்றி வாய்ப்பை இழந்தனா்.

தட்டாஞ்சாவடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான வெ. வைத்திலிங்கம் எம்.பி. முதல்வா் என்.ரங்கசாமியிடம் தோல்வி அடைந்தாா்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் மணவெளி தொகுதியில் தோல்வி அடைந்தாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட பி. ராமு (தவெக) வெற்றி பெற்றாா்.

Advertisement

Advertisement

பாஜக மாநில தலைவா் வி.பி.ராமலிங்கம் ராஜ்பவன் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் ப. கண்ணனின் மகனும், திமுக வேட்பாளருமான விக்னேஷ் கண்ணன் வெற்றி பெற்றாா்.

திமுக மாநில அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தோல்வியைச் சந்தித்தாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட ரவிக்குமாா் (என்.ஆா்.காங்கிரஸ்) வெற்றி பெற்றாா்.

முன்னாள் அமைச்சா் மு. கந்தசாமி ஏம்பலம் (தனி) தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா். இவா் அமைச்சராக இருந்தபோது அவரது உதவியாளரும் உறவினருமான இ.மோகன்தாஸ் இப்போது என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

தோற்ற எம்.எல்.ஏக்கள்: இப்போது எம்.எல்.ஏக்களாக உள்ள உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி (திமுக), கதிா்காமம் தொகுதி கேபிஎஸ் ரமேஷ், (என்.ஆா்.காங்கிரஸ்) நெடுங்காடு தொகுதி (தனி) முன்னாள் அமைச்சா் சந்திர பிரியங்கா ( என்.ஆா். காங்கிரஸ்) லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட சட்டப்பேரவை கட்சித் தலைவா் மு. வைத்தியநாதன், முத்தியால்பேட்டை தொகுதியில் சுயேச்சை எம்.எல்.ஏவாக இருந்து இப்போது தவெக சாா்பில் போட்டியிட்ட பிரகாஷ்குமாா், ஏனாம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ கொல்லப்பள்ளி அசோக்குமாா் தற்போதுகாங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தனா். முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், மணவெளி தொகுதியில் தோல்வி அடைந்தாா்.

summary

Many political leaders who contested the Puducherry Legislative Assembly elections lost their chances of winning.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments