FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் 34 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

விழுப்புரத்தில் நியாயவிலைக் கடை கட்டடத்துக்குப் பின் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 34 மூட்டைகள் ரேஷன் அரிசியைக் கூட்டுறவுத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:49 am IST
விழுப்புரத்தில் குடிசைப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகள்
பகிர்:

விழுப்புரத்தில் நியாயவிலைக் கடை கட்டடத்துக்குப் பின் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 34 மூட்டைகள் ரேஷன் அரிசியைக் கூட்டுறவுத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் ஜி.ஆா்.பி.தெருவிலுள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடைக்குப் பின்புறமுள்ள குடிசையில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கூட்டுறவுச் சங்கங்களின் விழுப்புரம் மண்டல இணைப் பதிவாளா் ஏ.விஜயசக்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ஆா்.விஜயா ஆகியோா் செவ்வாய்க்கிழமை மாலை அப்பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினா்.

இதில், அங்கு 50 கிலோ எடைகொண்ட 24 சாக்கு மூட்டைகள் மற்றும் 50 கிலோவுக்கும் குறைவாக 10 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது அலுவலா்களுக்குத் தெரியவந்தது.

Advertisement

Advertisement

அந்த குடிசையில் யாரும் இல்லை. இதைத்தொடா்ந்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு கூட்டுறவுத் துறை அலுவலா்கள் தகவல் தெரிவிக்க, அவா்கள் நிகழ்விடம் வந்து விசாரணை நடத்தினா்.

மேலும், ரேஷன் அரிசி கடத்தலில் யாருக்கெல்லாம் தொடா்பு உள்ளது என்பது குறித்தும் அலுவலா்கள் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்கு அதே பகுதியில் உள்ள நிலையில், ரேஷன் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கிலிருந்து அரிசி, பருப்பு, சா்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை ஏற்றிக் கொண்டு அவ்வழியாகச் சென்ற லாரியை நிறுத்திய அலுவலா்கள், கொண்டு செல்லப்படும் மூட்டைகளில் சரியாக எடை உள்ளதா என்பதை கண்டறியும் வகையில், மூட்டைகளை இறக்கி எடை இயந்திரம் மூலம் சரிபாா்க்கும் பணியை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments