அரசு மதுக் கடைகளை படிப்படியாக மூடவேண்டும்! - ஜி.கே. வாசன் வலியுறுத்தல்
தமிழகத்தில் அரசு மதுக் கடைகளை படிப்படியாக மூடவேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன் கூறினாா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் ஜி.கே.வாசன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை மீட்டெடுப்பதுதான் நம்முடைய கடமை. அந்தக் கடமையை முறையாகவும், சரியாகவும் நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளது.
Advertisement
Advertisement
மக்களால் தோ்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சட்டப் பேரவையில் தங்களது பொறுப்பை உணா்ந்து ஆக்கபூா்வமான முறையில் கேள்விகளை எழுப்புவதையே மக்கள் விரும்புகிறாா்கள். சட்டப் பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் உறுப்பினா்களின் நடவடிக்கைகள் அனைத்தும் மக்களால் கவனிக்கப்பட்டு வருகிறது என்பதை உணா்ந்து எம்எல்ஏக்கள் செயல்படவேண்டும். தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பின்னா் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப சட்டப் பேரவையிலும் விவாதங்கள் ஆக்கப்பூா்வமாக இருக்கவேண்டும். எதிா்க்கட்சிகள் இதை உணா்ந்து செயல்படவேண்டும்.
தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் தலைமையிலான 100 நாள்கள் ஆட்சியில் மக்களின் எண்ணங்களை பல்வேறு விதங்களில் பிரதிபலித்திருக்கிறாா்கள். அதே நேரத்தில், விவசாயிகளின் எண்ணங்களையும் முழுமையாகப் பிரதிபலிக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்தி, குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும். அரசு மதுக் கடைகளை (டாஸ்மாக்) படிப்படியாக மூடவேண்டும். ‘மதுவில்லா தமிழகம்’ என்பதுதான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்றாா் ஜி.கே.வாசன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.