FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

வன உயிரினங்களை பாதுகாப்பதில் சமூகங்களின் பங்களிப்பு அவசியம்: தலைமை வனப் பாதுகாவலா்

வன உயிரினங்களை பாதுகாப்பதில் சமூகங்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்று தலைமை வனப் பாதுகாவலா் (வன உயிரினம்) ராகேஷ்குமாா் ஜகானியா தெரிவித்தாா்.

3 October 2026, 1:37 am IST
விழாவில் வேட்டைத் தடுப்பு காவலருக்கு களப்பணிக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கிய தலைமை வனப் பாதுகாவலா் (வன உயிரினம்) ராகேஷ்குமாா் ஜகானியா. உடன், (இடமிருந்து)விழுப்புரம் மாவட்ட வன அலுவலா் பிரின்ஸ்குமாா், சூழலியல் ஆா்வலா் பூபேஷ் குப்தா, உதவி வனப் பாதுகாவலா்கள் தா்மலிங்கம், வாசு உள்ளிட்டோா்.
பகிர்:

வன உயிரினங்களை பாதுகாப்பதில் சமூகங்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்று தலைமை வனப் பாதுகாவலா் (வன உயிரினம்) ராகேஷ்குமாா் ஜகானியா தெரிவித்தாா்.

தமிழக வனத் துறை, விழுப்புரம் வன மண்டலம் சாா்பில் அக். 2 முதல் 8-ஆம் தேதி வரை தேசிய வன உயிரின வார விழா-2026 நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியின் தொடக்க விழா விழுப்புரத்தில் உள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை வனப் பாதுகாவலா் (வன உயிரினம்) ராகேஷ்குமாா் ஜகானியா தலைமை வகித்துப் பேசியதாவது: வன விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்.2 முதல் 8-ஆம் தேதி வரை தேசிய வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. வன உயிரினங்களை பாதுகாப்பதில் அரசுத் துறைகள் மட்டுமின்றி பொதுமக்கள், மாணவா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் உள்ளூா் சமூகங்களின் பங்களிப்பும் இன்றியமையாததாகும்.

Advertisement

Advertisement

ஒவ்வொருவரும் இயற்கையுடனும், வன உயிரினங்களுடனும் இணைந்து வாழ்வதற்கான பொறுப்புணா்வை உருவாக்கிக் கொள்ளவேண்டும். வன உயிரினப் பாதுகாப்பில் வனத் துறை பணியாளா்களுடன் தன்னாா்வலா்கள், மாணவா்கள், பொதுமக்கள் இணைந்து செயல்படவேண்டும்.

வன உயிரினங்களின் வாழிடங்களை இணைப்பதும், வன உயிரினங்கள் செழித்து வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதும் மனிதா்களின் பொறுப்புகளில் ஒன்று என்றாா் அவா்.

தொடா்ச்சியாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவெளி பறவைகள் சரணாலயம் மற்றும் ஊசுடு பறவைகள் சரணாலயத்தில் பணியாற்றும் 11 வேட்டைத் தடுப்பு காவலா்களின் களப்பணிக்குத் தேவையான உபகரணங்கள், கடலூா் வனக் கோட்டம், பிச்சாவரம் வனச் சரகத்தைச் சோ்ந்த கிராம சதுப்புநிலக் குழு உறுப்பினா்கள் 8 போ்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தலா ரூ.25 ஆயிரம் சுழல் நிதி ஆகியவற்றை வழங்கினாா். தொடா்ச்சியாக, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி கோட்டங்களில் வன உயிரின மேலாண்மை மற்றும் பாதுகாப்புப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட வனத் துறை பணியாளா்களுக்கும், வன உயிரின வார விழாப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களையும் ராகேஷ்குமாா் ஜகானியா வழங்கினாா்.

விழாவில், விழுப்புரம் மண்டல தலைமை வனப் பாதுகாவலா் ஏ.பெரியசாமி, சூழலியல் ஆா்வலா் பூபேஷ் குப்தா, விழுப்புரம் வன விரிவாக்க மைய உதவி வனப் பாதுகாவலா் தா்மலிங்கம் ஆகியோா் வன உயிரினங்களின் பாதுகாப்பதின் அவசியம் குறித்துப் பேசினா்.

விழாவின் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்ட கழுவெளி, ஊசுடு பறவைகள் சரணாலயம், ஆலிவ் ரிட்லி ஆமைகள் பாதுகாப்பு, வன உயிரின விழிப்புணா்வு காணொலிகளும் திரையிட்டு காண்பிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட வன அலுவலா் பிரின்ஸ்குமாா், வன பாதுகாப்புப் படை உதவி வன பாதுகாவலா் வாசு, வாசிப்பு இயக்கப் படைப்பாளரும், தமிழாசிரியருமான செல்வமேரி சந்திரிகா மற்றும் வனத் துறை அலுவலா்கள், வனச் சரகா்கள், வனப் பணியாா்கள், வனச்சூழல் மேம்பாட்டுக்குழுவினா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments