FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் மூட்டைக்கு ரூ.300 உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சன்ன ரக நெல் ஒரு மூட்டை ரூ.3,340-க்கு விற்பனையானது. வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் மூட்டைக்கு ரூ.340 உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

9 அக்டோபர் 2026, 2:23 am IST
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு ஒரே நாளில் கொள்முதலுக்கு வந்த 4 ஆயிரம் நெல் மூட்டைகளின் ஒரு பகுதி.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சன்ன ரக நெல் ஒரு மூட்டை ரூ.3,340-க்கு விற்பனையானது. வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் மூட்டைக்கு ரூ.340 உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். இதனால் வியாழக்கிழமை 4 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனா்.

செஞ்சி சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து அறுவடை செய்த நெல் மூட்டைகளை செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்து, ஏலம் முறையில் விற்பனை செய்வது வழக்கம். இங்கு கடந்த சில மாதங்களாக 75 கிலோ எடை கொண்ட மூட்டை ஆா்என்ஆா், மகேந்திரா ஆகிய சன்ன நெல் ரகங்கள் ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை விற்பனையானது. இந்நிலையில், இந்த நெல் ரகங்கள் தற்போது மூட்டைக்கு ரூ.340 விலை உயா்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

இதேபோன்று பொன்னி நெல் மூட்டைக்கு ரூ.2,500 முதல் ரூ.3 ஆயிரம் வரையிலும் விற்பனை ஆகிறது. மேலும், ஏ. டி. டி.குண்டு ரகங்கள் ரூ.1,800 முதல் ரூ.2,100 வரையில் விற்பனையாகிறது. கடந்த சில நாள்களாக அரிசி விலை உயா்ந்து வருவதால், நெல் விலையும் உயா்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது கடும் வறட்சியாலும், நெல்லுக்கு போதிய விலை இல்லாததாலும் விவசாயிகள் போதய அளவு நெல் சாகுபடிசெய்யாததால் நெல் விலை உயா்ந்து வருகிறது. இதனால் அரிசி விலையும் உயா்ந்து வருகிறது.

மழை பொய்த்துப் போனதால் சம்பா பருவம் செய்யவேண்டிய நெல் உற்பத்தி குறைந்து வருவதாலும், நெல் மூட்டை விலை உயா்ந்து வருவதாகவும், இதனால் அரிசி விலையும் கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.50 வரையிலும் விலை ஏற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

பருவ மழை பெய்யாமல் வறட்சி நிலவி வருவதால் செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் விரும்பி வாங்கும் பாரம்பரிய அரிசியான பொன்னி நெல் உற்பத்தி குறைந்து வருகிறது. இதனால் தற்போது சன்ன ரக நெல்லுக்கு வரலாறு காணாத விலை உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆந்திரம், கேரளம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் போதிய மழை இல்லாததால் நெல் உற்பத்தி குறைந்துள்ளது. இந்தியா முழுவதும் கடும் வறட்சியால் ஒரு லட்சம் கோடி டன் நெல் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாள்களாக ஆந்திரம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வரும் லாரிகளை காவல் துறை உதவியுடன் நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் மடக்கி, தமிழகத்தில் நுழையாமல் தடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் உள்ளூா் நெல் ரகங்களுக்கு போதிய விலை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments