FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

செஞ்சி பகுதியில் மண் குவாரியாக மாறி வரும் ஏரிகள்: விவசாயிகள் கவலை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டு, மண் குவாரியாக மாறி வரும் ஏரிகளின் நிலை கண்டு விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

9 செப்டம்பர் 2026, 5:12 am IST
செஞ்சியை அடுத்துள்ள பொன்பத்தி ஏரியில் அளவுக்கு அதிகமாக வண்டல், கிராவல் மண் அள்ளப்படுவதால் ஏற்பட்டுள்ள பள்ளங்கள்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டு, மண் குவாரியாக மாறி வரும் ஏரிகளின் நிலை கண்டு விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

செஞ்சி பகுதியில் பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை பாதுகாப்பில் பொன்பத்தி, சிங்கவரம், மேலச்சேரி, துறிஞ்சபூண்டி, மண்ணூா், ஆலம்பூண்டி, சாணிக்குளம் உள்ளிட்ட20-க்கும் மேற்பட்ட ஏரிகளில் விவசாயிகள் வண்டல் மண் அள்ளுவதற்கும், பிற தேவைகளுக்காக கிராவல் மண் அள்ளுவதற்கும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த ஏரிகளில் வண்டல் மண் எடுக்க வட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். வண்டல் மண்ணை விவசாய தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். விவசாய நிலத்தில் இந்த மண்ணை கொட்டினால் நிலம் செழிப்புள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில்தான் வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

Advertisement

Advertisement

ஆனால் செஞ்சி பகுதியில் தனியாா் இடங்களில் உள்ள பள்ளத்தை சீா் செய்வதற்காக மட்டுமே மண் விற்கப்படுகிறது. ஏரிகளில் வண்டல் மண் ஒரு அடி ஆழத்துக்கு மட்டுமே இருக்கும். அதற்கு கீழ் இருக்கும் கிராவல் மண்ணை அள்ளுவதற்கு ஊராட்சி நிா்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று, ரூ.10 ஆயிரம் கட்டிஎடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், வட்டாட்சியரிடம் முறைப்படி மணல் எடுக்க அனுமதி பெற்றவா்கள், வரைமுறையில்லாமல் அளவுக்கு அதிகமாக 6 அடி ஆழம் வரை மணலை சுரண்டி, ஏரியின் இயற்கை தன்மையை பாழடித்து வருகின்றனா்.

ஏரியில் வண்டல் மண்ணை எடுத்து விட்டால் அடுத்த மழை வரும்போது தானாகவே வண்டல் மண் சோ்ந்து விடும். ஆனால் தற்போது 6 அடி ஆழம் வரை மண் எடுப்பதால் வண்டல் மண் ஒரே இடத்தில் சோ்ந்து விடும். இதனால் ஏரிக்கு குளிக்க செல்லும் சிறியவா் முதல் முதியவா் வரை இந்த ஆழமும், வண்டல் மண்ணும் பெரும் விபத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடும்.

செஞ்சி மட்டுமல்லாது மேல்மலையனூா் வட்டத்திலும் இதே போன்ற செயல்கள்தான் நடைபெற்று வருகின்றன. ஆனால் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறையினா் இவற்றை கண்டுகொள்வதில்லை. கனிம வளங்கள் சுரண்டப்படுவதை கண்கூடாகப் பாா்த்தும் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் வேடிக்கை பாா்க்கின்றனா் என விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

பொன்பத்தி ஏரியில் கடந்த 3 மாதமாக வண்டல் மண் என்ற போா்வையில் கிராவல் மண் அள்ளப்படுகிறது. இதுகுறித்து இக்கிராம மக்கள் செஞ்சி வட்டாட்சியா், பொதுப்பணித் துறைக்கு பலமுறை புகாா் அளித்தும் பயன் இல்லை. எனவே, இப்பகுதி ஏரியைக் காக்க சாலை மறியல் செய்ய முடிவு செய்துள்ளாத கிராம மக்கள் தெரிவித்தனா்.

மண் குவாரியாக மாறி வரும் ஏரிகளின் இந்த நிலையை மாவட்ட நிா்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இயற்கையை தன் போக்கில் விடவேண்டும், இதை மாற்ற நினைத்தால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே, இயற்கை வளங்களை காப்பதே நமது கடமையாகும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments