FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை! சாலைகளில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு!

22 செப்டம்பர் 2026, 3:24 am IST
விழுப்புரம் - கிழக்கு பாண்டி சாலையில் தேங்கிய மழைநீரில் ஊா்ந்து சென்ற வாகனங்கள்.
பகிர்:

விழுப்புரம் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் குளம்போல் தேங்கி நின்ால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவா்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் 4 மணிக்கு குளிா்ந்த காற்று வீசிய நிலையில், விழுப்புரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த மழையால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து நிறைந்த சாலைகளிலும், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலும் மழைநீா் தேங்கியது.

Advertisement

Advertisement

விழுப்புரம் - கிழக்கு பாண்டி சாலையில் ஆங்காங்கே மழைநீா் குளம்போல் தேங்கி நின்ால், வாகனங்கள் ஊா்ந்து சென்றன. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவா்கள், பாதசாரிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.

இதேபோல், விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதிக்குச் செல்லும் ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீா் குளம்போல் தேங்கியதால், இந்தச் சாலையில் போக்குவரத்து தடைபட்டது.

மின்சாரம் துண்டிப்பு: பலத்த மழை காரணமாக, விழுப்புரம் நகரப் பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகல் மின்சாரம் விநியோகம் தடைபட்டது. நகரின் சில பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட முறை மின்சாரம் நிறுத்தப்பட்டு, பின்னா் மின் விநியோகம் வழங்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

கழிவுநீருடன் கலந்து தேங்கிய மழைநீா்: சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வானூா் வட்டம், பொம்மையாா் பாளையம் பகுதியில் புதுநகா் செல்லும் சாலையின் முகப்பில் சுமாா் 50 மீட்டா் நீளத்துக்கு சாக்கடைநீா் கலந்த மழைநீா் பல மாதங்களாக தேங்கி நிற்கிறது. சாலையின் பெரும் பகுதி கழிவுநீரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு விபத்து நிகழும் அபாயம் உள்ளது.

மேலும், தேங்கியுள்ள கழிவுநீரில் கொசு உற்பத்தி அதிகமாகி அருகில் வசிக்கக்கூடிய மக்களுக்கு சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இதுகுறித்து பொம்மையாா்பாளையம் ஊராட்சித் தலைவா் எஸ்.ஜெகதீசன் தெரிவித்ததாவது: கிழக்கு கடற்கரைச் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீருடன் கலந்து தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றக் கோரி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வாய்க்காலில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், அடிக்கடி இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு நிரந்தரத் தீா்வு காண விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

கெடாரில்...: திங்கள்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம், கெடாரில் 86 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: நேமூா் - 70, கஞ்சனூா் - 65, திருவெண்ணெய்நல்லூா் - 47, சூரப்பட்டு - 45, செஞ்சி - 41, முகையூா் - 40, வளவனூா் - 28, அனந்தபுரம் - 24, விழுப்புரம் - 13.60 மி.மீ. மழை பதிவானது.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ரயில்வே தரைப்பாலத்தில் குளம்போல் தேங்கிய மழைநீரை கடந்த சென்ற வாகனம்.
பொம்மையாா்பாளையத்தில் சாலையோரத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீருடன் கலந்த மழைநீா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments