FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

ஏரிகளில் முள்செடிகளை அகற்ற நடவடிக்கை தேவை

விழுப்புரம் மாவட்டத்தில் ஏரிகளில் முள்செடிகளை அகற்ற தீவிர நடவடிக்கை தேவை என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

23 செப்டம்பர் 2026, 4:06 am IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் ஏரிகளில் முள்செடிகளை அகற்ற தீவிர நடவடிக்கை தேவை என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு விழுப்புரம் கோட்டாட்சியா் ஏகாம்பரம் தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் யுவராஜா (விழுப்புரம்), லட்சாதிபதி (வானூா்), ரகுராமன் (திருவெண்ணெய்நல்லூா்), சாருமதி ( கண்டாச்சிபுரம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று பேசிய கருத்துகளின் விவரம்:

Advertisement

Advertisement

2025-ஆம் ஆண்டில் பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத்தொகை எப்போது கிடைக்கும். இந்த தொகை கிடைக்குமா அல்லது கிடைக்காதா எனத் தெரியவில்லை. விழுப்புரம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் இணையவழி சேவை மையங்கள் மூலம் புதிய குடும்ப அட்டைக் கோரி விண்ணப்பம் செய்தால், விண்ணப்பங்கள் அப்படியே உள்ளது. வருவாய் ஆய்வாளா் நிலையில் ஒப்புதல் தரப்படாமலேயே உள்ளது. தளவனூா் புதிய அணைக்கட்டுப் பணிகள் எப்போது முடிக்கப்பட்டு, திறக்கப்படும். மழைக்காலம் தொடங்குவதற்கு முன் திறக்கப்பட்டால்தான் விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

விழுப்புரம் மருதூா், பொன்னேரி, சாலாமேடு ஏரிகள் உள்பட பொதுப்பணித் துறைகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளில் முள்செடிகள் எப்போது அகற்றப்படும். இதற்கு பொதுப்பணித் துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. மருதூா் ஏரியில் கழிவுநீா் கலப்பதால் அங்கு துா்நாற்றம் வீசுகிறது. மேலும், ஏரி தண்ணீரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கலப்பட நெல் விதைகள், கலப்பட உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதை தடுக்க என்ன நடவடிக்கையை வேளாண் துறை மேற்கொண்டுள்ளது. கலப்பட நெல் விதைகளை விற்பனைசெய்வதன் மூலம் நெல் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உள்ளது. பயோ உரங்களை வாங்க விற்பனை நிலையங்களில் விவசாயிகளைக் கட்டாயப்படுத்துவது ஏன்?.

மாவட்டத்தில் கலப்பட உரங்கள் தயாரிக்கப்பட்டு, மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். கலப்படம் இல்லாத உரங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

சா்க்கரை விலை உயா்ந்த நிலையிலும், முண்டியம்பாக்கத்திலுள்ள தனியாா் சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு நிலுவைத் தொகயை வழங்காமல் இருப்பது ஏன்?. விவசாயிகளுக்கு எப்போது பணம் வழங்கப்படும். இதுபோல சிறப்பு ஊக்கத்தொகையையும் விவசாயிகளுக்கு எப்போது வழங்கப்படும். ஒவ்வொரு துறையும் தங்கள் துறை சாா்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விளக்கக் கையேடுகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றனா் விவசாயிகள்.

விவசாயிகள், சங்கப் பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பதிலளித்து பேசினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments