சப்தமில்லாத செலவும் உண்மையான பக்தியும்!
வெளிப்புற ஆடம்பரத்தை விட, எளிய சேவைக்கே முதலுரிமை பற்றி ஜோதிடர் கூறுவது..
கடவுள் எங்கு இருக்கிறார் என்பது பலரின் கேள்வி. வெளிப்புற சடங்குகளை விட, தூய அன்பால் நிரம்பிய இதயத்தில்தான் இறைவன் குடியிருப்பார் என்பதை பூசலார் நாயனார் வரலாறு உணர்த்துகிறது.
திருநின்றவூரில் வாழ்ந்த பூசலார், சிவபெருமானுக்கு கோயில் கட்ட ஆசைப்பட்டார். ஆனால் அவரிடம் செல்வம் இல்லை. எனினும், எம்பெருமானின் மீது கொண்ட ஆழ்ந்த சிவபக்தியால், மனதிலேயே ஒரு மாபெரும் கோயிலை உருவாக்கினார். அதில் கோபுரம், கொடிமரம், கலசம், ஆகம முறைகள் என அனைத்தையும் பல ஆண்டுகளாக ஆழ்ந்து சிந்தித்து வடிவமைத்துக் கட்டி, கும்பாபிஷேக நாளையும் நிர்ணயித்தார். அதே நாளில் பல்லவ மன்னனும் ஒரு பெரிய சிவாலயத்தின் கும்பாபிஷேகத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தான். ஆனால் சிவபெருமான் மன்னனின் கனவில் தோன்றி, நீ குறிப்பிட்ட நாளில் என் பக்தன் கட்டிய கோயிலுக்கு முதலில் நான் செல்ல வேண்டும். ஆகவே உன் கும்பாபிஷேக நாளை மாற்றிவை என்று அருளினார்.
அதன்படி சிவபெருமான் பூசலார் கட்டிய மனக்கோயிலுக்கு எழுந்தருளினார். பின்னர் மன்னன் பூசலாரை நேரில் சந்தித்து வணங்கி, அவர் கட்டிய மனக்கோயிலின் மகிமையை உணர்ந்து, அதே இடத்தில் கற்களால் கோயில் கட்டியதாகக் கூறப்படுகிறது. அதுவே இன்று திருநின்றவூரில், ஸ்ரீ இருதயாலீஸ்வரர் சமேத மரகதாம்பிகை திருக்கோயிலாகக் காட்சியளிக்கிறது. இந்த வரலாறு, உண்மையான பக்தி என்பது வெளிப்புற ஆடம்பரத்தில் அல்ல; தூய அன்பும் அசைக்க முடியாத இறை நம்பிக்கையிலும் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இறைவன் அளிக்கும் கஷ்டங்களையும் அருளாக ஏற்று மனத்துணிவுடன் வாழ்வதே உயர்ந்த பக்தி. சிவதொண்டு என்பது நம் கர்மங்களைப் பரிசுத்தப்படுத்தி, முக்தி எனும் உயர்ந்த நிலையை நோக்கி நம்மை வழிநடத்தும் ஆன்மிகப் பாதையாகும்.
Advertisement
Advertisement
சொல்லக்கூடாத செலவுகள் – ஏன்?
வாழ்க்கையில் நாம் செய்யும் சில நல்ல செயல்கள் வெளியில் சொல்லாமல் இருப்பதே சிறந்தது. ஏனெனில், அவற்றைப் பெருமையாக வெளிப்படுத்தும்போது அதன் நற்பலன் குறைந்து விடும். உண்மையான தர்மமும் உதவியும் அமைதியாகச் செய்யப்படும்போது தான் அதன் ஆன்மிக மதிப்பு உயர்கிறது. உண்மையான பக்தி என்பது சத்தமில்லாத ஆன்மிகம். ஒரு பக்தன் தன் நம்பிக்கையையும் நற்செயல்களையும் வெளியில் காட்டிக்கொள்ள விரும்பமாட்டான். அமைதியாக தர்மம் செய்து, மனதில் இறைவனை நினைத்து வாழ்வான்.
சிலர் "இந்த கோயிலுக்குச் சென்றேன், இவ்வளவு காணிக்கை கொடுத்தேன்" என்று பெருமையாகப் பேசுவார்கள். ஆனால் கோயில் பராமரிப்பு, அன்னதானம், கல்வி உதவி, வஸ்திரம் அல்லது மாங்கல்ய தானம் போன்ற எந்த தர்மமாக இருந்தாலும் அதை வெளியில் சொல்லாமல் செய்வதே உயர்ந்த பண்பு. நம்மை இந்த தர்ம காரியங்கள் செய்யவே இறைவன் படைத்துள்ளார் என்பதை உணர வேண்டும். பக்தி வெளியில் சத்தமாக இல்லாவிட்டாலும், உள்ளத்தில் அது உறுதியான நம்பிக்கையாய் இருக்க வேண்டும். ஏழை, எளிய மக்களுக்காகச் செய்யும் உதவி, மகேசனுக்கே செய்யும் தொண்டாகும். ஆடம்பரம் இல்லாமல் செய்யப்படும் அறச்செயல், தலைமுறைகளைக் காக்கும் புண்ணியமாக மாறும்.
சில செயல்களைப் பெற்றோர் சொல்லிக்காட்டாமல் இருப்பதே சிறந்தது. குழந்தைகளின் கல்வி செலவு அல்லது பெண்ணின் திருமணச் செலவு குறித்து பெருமையாகப் பேசுவது தவிர்க்கப்பட வேண்டும். இவை அனைத்தும் பெற்றோரின் கடமையும் பாசத்தின் வெளிப்பாடும் ஆகும். ஆடம்பரமாக வெளிப்படுத்த வேண்டியவை அல்ல. கடனாக இருந்தாலும், தன் பிள்ளைகளுக்காகச் செய்த தியாகத்தை மற்றவர்களிடம் கூறி பெருமை கொள்வது உயர்ந்த பண்பல்ல. அமைதியாகச் செய்யப்படும் கடமைதான் உண்மையான அன்பின் அடையாளம்.
ஏழைக்கு ஒரு எள் உருண்டை கொடுத்தாலும் அது உயர்ந்த தர்மமே. உதவியின் அளவு முக்கியமல்ல; அதைச் செய்யும் அன்பும் கருணையும் தான் உண்மையான மகத்துவம். அன்னதானம் செய்த பின் அதன் எண்ணிக்கையையோ பெருமையையோ வெளியில் புகழ்ந்து கூறாமல் இருப்பதே சிறந்தது. அமைதியாகச் செய்யப்படும் தர்மமே நிலையான புண்ணியத்தை அளிக்கும்.
"அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்,
பெற்றான் பொருள்வைப் புழி"
(திருக்குறள் 226)
பொருள் - "பசியால் வாடுபவரின் பசியை போக்குவது, ஒருவர் சேர்த்த செல்வத்தின் உண்மையான பயன் என்பதைக் கூறுகிறது". நம்மால் முடிந்த உதவியை, கடவுள் நமக்குக் கொடுத்த கடமையாக எண்ணி மனதார செய்வதே உயர்ந்த பக்தியும் அறமும் ஆகும். ஏழை எளியோருக்கான மருத்துவ உதவி உயர்ந்த தர்மமாகும். எதிர்பார்ப்பில்லாமல் செய்யப்படும் ரத்ததானமும் மருத்துவ உதவியும், ஒரு உயிரைக் காப்பதற்குச் சமமான புண்ணியத்தை அளிக்கும்.
இறைத் தொண்டு என்பது கோயிலில் மட்டும் செய்யப்படுவது அல்ல; மனிதர்களுக்கு உதவியாக இருப்பதில்தான் அதன் உண்மையான அர்த்தம் உள்ளது. குறிப்பாகத் துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலும் ஆதரவும் அளிப்பது உயர்ந்த இறைச் சேவையாகும். எதிர்பார்ப்பில்லாமல் செய்யப்படும் ஒவ்வொரு நற்செயலும் இறைவனுக்கே அர்ப்பணிக்கும் பூஜையாகும். அனைத்து உயிர்களிலும் இறைவனைக் கண்டு, எளியோருக்கு அமைதியாக உதவுவதுதான் உண்மையான இறைத்தொண்டு.
"உண்மையான பக்தி சத்தமில்லாமல் இருக்கும்" - பக்தி என்பது வெளிப்புற ஆடம்பரம் அல்ல; உள்ளத்தில் உணர்ந்து வாழும் ஆன்மிக உணர்வாகும்.
vaideeshwra2013@gmail.com
தொலைபேசி - 8939115647
"Where is God?" is a question asked by many. The life story of Poosalar Nayanar reveals that, rather than in external rituals, the Divine resides within a heart filled with pure love.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.