கேது தோஷம் நீக்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு!
தடைகள், தோஷங்கள் நிவர்த்தியாக செய்ய வேண்டிய விநாயகர் சதுர்த்தி வழிபாடு பற்றி..
ஜோதிட சாஸ்திரத்தில் ராகுவை போகக் காரகன், கரும்பாம்பு என்றும், கேதுவை ஞானக்காரகன், செம்பாம்பு என்றும் குறிப்பிடுகின்றனர். மனிதனின் கர்மப் பாதையைக் கணக்கிட்டு, அதற்கேற்ப பலன்களை வழங்கும் கிரகங்களாக ராகு–கேதுவை ஜோதிட சாஸ்திரம் கருதுகிறது. ராகு, ஒருவரின் கர்மத்தின் சுப-அசுப பலன்களைப் பல மடங்கு அனுபவிக்கச் செய்பவர். அதேவேளையில், கேது அந்த அனுபவங்களின் மூலம் மனிதனை ஆன்மிகத் தேடலுக்குள் அழைத்துச் சென்று, கர்ம வினைகளிலிருந்து விடுபடும் பாதையை நோக்கி வழிநடத்துபவர்.
மாய சக்திமிக்க கேது, சூட்சுமமான வலைகளைப் பின்னுவதில் சாமர்த்தியமிக்கவர். ஞானக்காரகன் எனக் கருதப்பட்டாலும், சில சூழ்நிலைகளில் ஞானத்தை மறைத்து, குழப்பம் மற்றும் அஞ்ஞானத்தையும் உருவாக்கக்கூடியவர். ஜாதகத்தில் கேது இருக்கும் பாவம், ராசி, நட்சத்திரம், பார்வை மற்றும் பிற கிரகங்களின் தொடர்பைப் பொறுத்து அவரது செயல்பாடுகள் மாறுபடும். மறைமுகத் தடைகள், எதிர்பாராத திருப்பங்கள், பொருளாதாரச் சரிவு, அச்சம் மற்றும் வாழ்க்கையில் எளிதில் புரிந்துகொள்ள முடியாத நிகழ்வுகளை ஏற்படுத்தும் சக்தி கேதுவுக்கு உண்டு.
குறிப்பாக, நோய் அல்லது பிரச்னை மறைந்து இருந்து பின்னர் தீவிரமடைவதும் கேதுவின் சூட்சுமத் தன்மையுடன் தொடர்புடையது. கேது பாம்பின் வால்பகுதியுடன் தொடர்புப்படுத்தப்படுகிறார். பாம்பு பழைய தோலை உரித்து புதிய தோற்றம் பெறுவது போல, கேதுவும் பழைய கர்மப் பதிவுகள் மற்றும் தேவையற்ற பற்றுகளை விடுவித்து, மனிதனை ஆன்மிகப் பாதையை நோக்கி அழைத்துச் செல்பவர். அமைதியாகத் தோன்றும் பாம்பின் சக்தியைப் போலவே, கேதுவின் செயல்பாடுகளும் பல நேரங்களில் மறைமுகமாகவும் சூட்சுமமாகவும் வெளிப்படும்.
Advertisement
Advertisement
பாரம்பரிய ஜோதிடத்தில் காலபுருஷ தத்துவத்தின் முக்கிய திரிகோணமாகவும், நெருப்பு ராசிகளாகவும் மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை உள்ளன. இதில் தான் கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் அமைந்துள்ளன. இங்கும் ஒரு சில சூட்சுமங்கள் மறைந்துள்ளது.
தமிழ்ப் புத்தாண்டான சித்திரை முதல் நாளில், சூரியன் மேஷ ராசியில் கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி 1ல் தன் முதல் நகர்வைத் துவங்குவார். இக்காலத்தில் வெயிலின் தாக்கமும் படிப்படியாக அதிகரிக்கும். காலபுருஷனின் 5ம் பாவமான சிம்மத்தில், சூரியன் ஆட்சி செய்கிறார். இது குழந்தை பிறப்பு, பூர்வ புண்ணியம், மற்றும் முன்னோர்களின் மரபைக் குறிக்கிறது. இங்குள்ள மகம் கேதுவின் நட்சத்திரம். இது உயிர்ப்பிறப்பு மற்றும் மரபணுத் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.
காலபுருஷனின் 9ம் பாவமான தனுசு என்பது பாக்கியம் மற்றும் ஆன்மிகத் தேடலைக் குறிக்கும். இங்கு ராம நாமத்தை மனதில் நிலைநிறுத்தி மகிழும் வீர ஆஞ்சநேயரின் பிறப்பு நட்சத்திரமாக கேதுவின் நட்சத்திரமான மூலம் போற்றப்படுகிறது.
கேதுவின் தாக்கத்தைத் தணிக்கும் விநாயக சதூர்த்தி வழிபாடு: கேது தசா-புத்தி மற்றும் கோச்சார காலங்களில் தடைகள், எதிர்பாராத பிரச்னைகள் ஏற்படலாம். இவற்றை எதிர்கொள்ள விநாயகர் சதுர்த்தி வழிபாடு சிறப்பான ஒன்று. ஆவணி வளர்பிறை சதுர்த்தியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுதல் மற்றும் தர்மச் செயல்கள் சிறப்பானவை. கணங்களின் தலைவனான மகா கணபதியின் ஒருசில திருநாமங்களும் அருளும்.
மஞ்சள் பிள்ளையார்: அனைத்து சுப காரியங்களுக்கும் முன்னின்று, குருவாக இருந்து அருளாசி வழங்குபவர் மஞ்சள் பிள்ளையார். இவரின் ஆசிர்வாதம் நிச்சயம் தேவை. முக்கியமாக மஞ்சள் என்பது மகாலட்சுமியைக் குறிக்கும். இவரை புதிய வீட்டிற்குள் முதலில் கொண்டு செல்வது விசேசமான ஒன்று.
களிமண் கணபதி: இயற்கை அன்னையின் மண்ணால் உருவாக்கப்படும் களிமண் கணபதியை வழிபட்டால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை. செவ்வாய் மண்ணைக் குறிக்கும் கிரகமாகக் கருதப்படுவதால், செவ்வாய் தொடர்பான தடைகள் மற்றும் தோஷ நிவர்த்திக்குக் களிமண் கணபதி வழிபாடு சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மேலும், சாணப் பிள்ளையாரை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பதும் ஐதீகம். விநாயகரை பக்தியுடன் வழிபட்டு, பின்னர் நீரில் கரைப்பது பழைய பற்றுகளை விடுத்து, புதிய நம்பிக்கையுடன் வாழ்க்கையைத் தொடங்குவதன் அடையாளமாகும்.
துவிஜ கணபதி: விநாயகரின் 32 திருவுருவங்களில் 6வது வடிவமாகக் கருதப்படுகிறார். நான்கு தலைகள், நான்கு கரங்களுடன் சுவடி, அட்சமாலை, தண்டம், கமண்டலம் ஏந்தி அருள்பாலிக்கிறார். ‘துவிஜ’ என்பதற்கு “இருமுறை பிறந்தவர்” என்று பொருள். தீய மற்றும் எதிர்மறை சக்திகளை அகற்றி, வாழ்வில் வெற்றியை அருள்பவர்.
சித்தி விநாயகர்: காரியங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற அருள்புரியும் சித்தி விநாயகர், பக்தர்களின் நல்ல முயற்சிகளுக்கு வெற்றியைத் தருபவராகப் போற்றப்படுகிறார்.
வல்லப கணபதி: தடைகள் மற்றும் எதிர்மறைச் சக்திகளை அகற்றி, பக்தர்களுக்கு நல்ல வழியைக் காட்டும் வல்லமை கொண்டவராக வல்லப கணபதி போற்றப்படுகிறார்.
இரட்டை பிள்ளையார்: இவரை வழிபட்டு வேண்டினால், கேட்ட வரங்களை இரட்டிப்பாக அருள்வார் என்பது ஐதீகம். குழந்தை வரம், தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைப் பன்மடங்காக அருளும் சக்தி வாய்ந்த வடிவமாகப் போற்றப்படுகிறார்.
முக்கால விநாயகர்: கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலங்களிலும் ஏற்படும் இடர்களை நீக்கி, வாழ்க்கையில் நல்ல பாதையை அமைத்துத் தரும் அருள் சக்தியாகும் வல்லமைமிக்க மூன்று கால விநாயகர்.
மோதகப்பிரியன்: ஏழை எளியவர்களும் எளிதாகப் படைக்கக்கூடிய வெல்லம், அரிசியால் செய்யப்பட்ட மோதகம், பால், தேன், எருக்கம் பூ, அருகம் புல் மற்றும் பழங்கள் போன்ற போன்ற நைவேத்தியங்களை ஏற்றுக்கொண்டு, பக்தர்களுக்கு நல்வரங்களை அருள்பவர்.
கஜநாதன்: ‘கஜ’ என்றால் யானை, ‘நாதன்’ என்றால் தலைவன் என்று பொருள். விநாயகரை “யானைகளின் தலைவன்” என்ற பொருளில் கஜநாதன் எனப் போற்றுகின்றனர். இவர் யானையைப் போன்று அறிவு, ஞானம் மற்றும் நுண்ணறிவையும் மற்றவர்களுக்கு வழங்குபவர்.
ஆதி விநாயகர்: மனித முகத்துடன் அருள்பாலிக்கும் விநாயகரின் தொன்மையான வடிவமாகும். கெட்ட கர்ம பலன்களைத் தகர்த்து எறிபவர் ஆதி விநாயகர்.
சித்தி-புத்தி விநாயகர்: சித்தி, நமது நல்ல முயற்சிகளால் கிடைக்கும் வெற்றியையும்; புத்தி, சரியான முடிவுகளை எடுக்கத் தேவையான நுண்ணறிவையும் குறிக்கின்றன. இவரை வழிபடுவதன் மூலம் முயற்சியுடன் வெற்றிப் பாதையில் முன்னேறவும், குடும்ப ஒற்றுமையுடன் வாழவும் அருள் கிடைக்கும்.
நாக யக்ஞோபவீத கணபதி: நாகத்தைப் பூணூலாக அணிந்த விநாயகரின் சிறப்பு வடிவம். நாக சக்தியின் பாதுகாப்பு, குண்டலினி ஞானம் மற்றும் ஆன்மிக ஒழுக்கத்தை நிலைநாட்டும் விநாயகர். எப்பேர்ப்பட்ட ராகு கேது தோஷத்தையும் நிவர்த்தி செய்யும் விநாயகர்.
வக்கிரதுண்ட கணபதி: சூழ்நிலைக்கேற்ப வளைந்து கொடுத்து, வக்கிரமான சிந்தனைகளையும் அகற்றி, கடினமான பிரச்னைகளுக்காண வழியைக் காட்டுபவர்.
பாலச்சந்திரன்: தலையில் பிறைச் சந்திரனைத் தாங்கிய பாலச்சந்திரன், மனதில் உள்ள இருளை அகற்றித் தெளிவையும் அமைதியையும் அருள்பவர். சந்திர தோஷம் நிவர்த்தி செய்பவர்.
சூர்ப்பகர்ணன்- செவிசாய்த்த விநாயகர்: சூர்ப்பம் போன்ற பெரிய காதுகளைக் கொண்டவர் என்பதால் சூர்ப்பகர்ணன் என அழைக்கப்படுகிறார். பக்தர்களின் வேண்டுதல்களைச் செவிசாய்த்துக் கேட்டு, உடனடியாகக் குறைகளைத் தீர்த்து அருள்பவர்.
மூஷிக வாகனன்: மூஷிகத்தை வாகனமாகக் கொண்ட விநாயகர், பக்தர்களின் சிறிய முயற்சிகளிலும், தொடர் பயணங்களிலும் தடைகள் அகற்றி வெற்றியுடன் முன்னேற அருள்புரிபவர்.
இடம்புரி விநாயகர்: இவரின் தும்பிக்கை இடம் புறமாக இருக்கும். இவர் அமைதியான முறையில் சுலபமாகச் செல்வத்தை அள்ளித் தரும் வீட்டில் வழிபடும் குளுமையான விநாயகர்.
வலம்புரி விநாயகர்: தும்பிக்கை வலப்புறமாகச் சுழித்து அமைந்துள்ள வலம்புரி விநாயகரை வழிபடுவது சிறப்பானது. இவர் சூரிய நாடியைக் குறிக்கும் தெய்வம். வெற்றி, வளம் மற்றும் தடையற்ற முன்னேற்றத்திற்காகப் பக்தர்கள் இவரைக் கடுமையான வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
தும்பிக்கை கணபதி: இவரின் தும்பிக்கை வளைந்து இல்லாமல் நேராக இருக்கும். அழகு என்பது வெளிப்புறத் தோற்றத்தில் மட்டுமல்ல; நல்ல எண்ணங்களிலும் தூய உள்ளத்திலும் உள்ளது என்பதை உணர்த்தும் கணபதி.
பிள்ளையார்பட்டி விநாயகர்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், பக்தர்களால் சிறப்பாகப் போற்றப்படும் விநாயகர் திருத்தல மூர்த்தியாக விளங்குகிறார். சனி மற்றும் பாவ கிரகத் தாக்கங்களால் ஏற்படும் தடைகள் நீங்கி நல்வாழ்வு கிடைக்க வேண்டி, பக்தர்கள் இவரை வழிபடுகின்றனர்.
உச்சிஷ்ட கணபதி: இந்த கணபதியை சித்தர்கள் மற்றும் மகான்களால் ரகசியமாக வழிபடப்படும் சக்தி வாய்ந்த தாந்திரிக வடிவமாகும். ஒரு சக்தி வாய்ந்த மூல தாந்திரிக வடிவமாகக் கருதப்படுகிறது. இவரைத் தரிசித்து வழிபட்டால் தடைகள் நீங்கி, எல்லாவித பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. நமக்குக் கொடுப்பினை இருந்தால் மட்டுமே இவரைத் தரிசிக்க முடியும்.
கேதுவின் எதிர்மறைத் தாக்கத்தால் ஏற்படும் குழப்பம், மனத்தடுமாற்றம், கர்ம வினைத் தாக்கம், பொருளாதாரச் சிக்கல்கள், திருமணம் மற்றும் குழந்தைப் பேறு தடைகளுக்கு விநாயகர் சதுர்த்தி வழிபாடு சிறந்த பரிகாரமாகக் கருதப்படுகிறது. விக்ன விநாயகரை நம்பி வழிபட்டு, ஞானமும் வளமும் நல்வாழ்வும் பெறுவோம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.