ஜாதகத்தில் ராகு தோஷமா? தடைகளுக்கு வழிகாட்டும் சீரடி சாய்பாபா!
ராகு தசையில் சாய்பாபா வழிபாடு ஏன் முக்கியம்? என்பதைப் பற்றி இக்கட்டுரையில்...
ஜோதிடத்தில் குரு பகவான் ஞானம், தர்மம், ஆன்மிகம், நல்லாசி, உயர்ந்த சிந்தனை, நம்பிக்கை, குழந்தைப்பேறு, சேமிப்பு மற்றும் செல்வம் ஆகியவற்றைக் குறிக்கிறார். இதுதவிர வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையச் சரியான பாதையுடன் வழிகாட்டுதலும் மிகவும் முக்கியம்.
நாம் எவ்வளவு திறமை பெற்றிருந்தாலும், சரியான நேரத்தில் சரியான வழிகாட்டுதல் கிடைத்தால்தான் அந்தத் திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடியும். ஒருவர் புதிய தொழிலைத் தொடங்கும் போதும், திருமணம் போன்ற முக்கியமான வாழ்க்கை முடிவுகளை எடுக்கும்போதும், சரியான ஆலோசனையும் வழிகாட்டுதலும் அவசியமாகிறது.
குறிப்பாக, சரியான நேரத்தில் சரியான நபர் நம் வாழ்க்கையில் வழிகாட்டியாக அமைவது இறைவனின் அருளாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், குருவின் பார்வையும், அருளும், வழிகாட்டுதலும் வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகள், சரியான முடிவுகள் மற்றும் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய காரணிகளாகக் கருதப்படுகின்றன. நமது கலியுகத்தில் குருவாக வாழ்ந்து, மக்களுக்கு ஆன்மிக வழிகாட்டுதலையும் நம்பிக்கையையும் வழங்கிய மகான் சீரடி சாய்பாபா. இன்றும் அவர் நம்மோடு வாழ்ந்து வருவதாக அவரது பக்தர்கள் உணர்கின்றனர். இறைவனின் தூதராகவும், குருவாகவும் போற்றப்படும் சீரடி சாய் பாபாவின் வாழ்க்கையையும், அவரது ஆன்மிக வழிகாட்டுதலையும் ஜோதிடப் பார்வையுடன் காண்போம்.
Advertisement
Advertisement
ராகுவால் ஏற்படும் தோஷ நிவர்த்தி ஸ்ரீ சாய் பாபாவின் ஆசிர்வாதமும் அருளும்
ஜோதிட சூட்சுமத்தின்படி, ஒருவரின் ஜாதகத்தில் ராகு பகவான் நிற்கும் இடத்தின் பலன்கள் மாறுபடும். ராகுவால் ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் துன்பங்கள் குறையவும், வாழ்க்கையில் மனத்தெளிவும் நல்வழி காட்டுதலும் கிடைக்கவும் ஸ்ரீ சீரடி சாயிநாதரை நம்பிக்கையுடன் வணங்குவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ஜோதிடத்தில் ராகு பொதுவாக வெளிநாட்டுத் தொடர்புகள், பிறமதக் கலாசாரங்கள், எதிர்பாராத திருப்பங்கள், நோயின் தாக்கம், மருத்துவச் சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சை போன்றவற்றைக் குறிக்கும் கிரகமாகக் கருதப்படுகிறது.
ஸ்ரீ சாய்பாபாவின் வாழ்க்கையில் இந்து மற்றும் இஸ்லாமிய ஆன்மிகச் சூழல்களின் தாக்கம் இருந்ததாகப் பக்தி மரபில் கூறப்படுகிறது. இதனால், ராகுவுடன் தொடர்புடைய வெளிநாட்டுத் தொடர்புகள், பிற மதத்தினருடனான உறவுகள், தொழில் மாற்றங்கள், பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள் போன்ற சூழ்நிலைகளில் சாயிநாதரின் அருள் நல்ல வழிகாட்டுதலை அளிக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை. ராகுவின் மகாதசை 18 ஆண்டுகள் நடைபெறும். இந்தக் காலகட்டத்தில் மனக்குழப்பம், எதிர்பாராத தொழில் மாற்றங்கள், திடீர் நிகழ்வுகள் மற்றும் பல்வேறு சவால்களைச் சந்திக்க நேரிடலாம். அத்தகைய காலங்களில் ஸ்ரீ சீரடி சாயிநாதரை நம்பிக்கையுடன் வழிபடுவது மனதிற்கு ஆறுதலையும், பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனவலிமையையும், திடமான நம்பிக்கையையும் அளிக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
குறிப்பாக, ராகு தசை-புத்தி காலங்களில் திருமண சம்பந்தங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் சில ஜாதகங்களில் காணப்படலாம். வேறு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கிடையேயான திருமணம், திருமணத் தடைகள், தம்பதிகளிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மற்றும் குழப்பங்கள் போன்ற சூழ்நிலைகளிலும் சாயிநாதரை மனதார வணங்கி அவரது அருளைப் பெறலாம் என்ற ஆன்மிக நம்பிக்கை உள்ளது. இதுபோல, குழந்தைப்பேற்றிற்கான மருத்துவச் சிகிச்சை, வெளிநாட்டில் உயர்கல்வி, இரண்டாம் திருமணம், வெளிநாட்டு வாய்ப்புகள் போன்ற ராகுவுடன் தொடர்புடைய விஷயங்களிலும் சாயிநாதரின் அருளை நாடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. வாழ்க்கையில் எத்தகைய தடைகள் வந்தாலும், உண்மையான பக்தியுடனும் நம்பிக்கையுடனும் குருவின் பாதங்களைப் பற்றிப் பிரார்த்தனை செய்தால், அவர் நமக்குச் சரியான பாதையைக் காட்டி, பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனவலிமையையும் நம்பிக்கையையும் அளிப்பார். அவரது அருளால் வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி, நல்ல மாற்றங்களும் முன்னேற்றமும் ஏற்படும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும்.
ஜாதகத்தில் குருவின் முக்கியத்துவம்
குருவின் சுப அசுப பலனைப் பார்க்கும்போது அவர் எந்த ராசியில் இருக்கிறார், எந்த பாவத்தில் இருக்கிறார், யாருடைய பார்வையைப் பெறுகிறார், எந்த கிரகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளார், மேலும் வர்க்க சக்கரத்தில் அவரது நிலை எவ்வாறு உள்ளது என்பதையும் ஆராய்வது முக்கியம். ஒருவருடைய ஜாதகத்தில் குருவின் நிலை வலிமையாக இருந்தால், அறிவு, நல்ல சிந்தனை, பெரியவர்களின் ஆதரவு, கல்வி, ஆன்மிக ஈடுபாடு மற்றும் வாழ்க்கையில் சரியான ஆலோசனை கிடைப்பது போன்ற அம்சங்கள் சாதகமாக அமையலாம். குரு என்பது வெறும் பொருளாதார வளர்ச்சியை மட்டும் குறிப்பதல்ல. "எது சரியான பாதை?" என்பதை உணரச் செய்யும் விவேகத்தையும் குறிக்கிறது. ஜோதிடத்தில் குருவின் அருள் சில நேரங்களில் பணம் அல்லது பதவி வடிவில் மட்டுமல்லாமல், சரியான மனிதரைச் சந்திப்பது, நல்ல ஆலோசனைகளை பெறுவது, ஒரு பிரச்னைக்கு எதிர்பாராத தீர்வு கிடைப்பது, மனத் தெளிவு ஏற்படுவது போன்ற பல்வேறு வடிவங்களில் வெளிப்படலாம். குரு தசா–புத்தி காலங்களில் ஒருவர் ஆன்மிக வழிகாட்டுதலைத் தேடத் தொடங்கலாம்.
சாயிநாதரின் எளிமையான வாழ்க்கை மற்றும் அவரின் போதனைகள்
சாயிநாதரின் போதனைகளில் முக்கியமானவை பிறருக்கு உதவுதல், அன்பு காட்டுதல், மனநிறைவுடன் தொண்டு செய்தல், பிறரை மன்னித்தல் மற்றும் குருவின் மீது முழு நம்பிக்கை வைத்திருத்தல் ஆகியவையாகும். இவற்றை நம் வாழ்க்கையில் கடைப்பிடிப்பது மன அமைதியையும், வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்த உதவும். சீரடி சாய்பாபா எங்குப் பிறந்தார், எங்கிருந்து வந்தார் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அவரது ஆரம்ப வாழ்க்கையைப் பற்றிய தகவல்கள் யாருக்கும் தெரியாது. சில பக்தி மரபுகளில், அவர் பிராமணக் குடும்பத்தில் பிறந்து, ஒரு இஸ்லாமியரால் அரவணைத்து வளர்க்கப்பட்டதாகவும், பின்னர் அந்த வளர்ப்புத் தந்தை மறைந்த பிறகு மீண்டும் ஒரு பிராமணக் குடும்பத்தைச் சென்றடைந்ததாகவும் கூறப்படுகிறது. சாய் பக்தர்கள் அவரை தத்தாத்ரேயரின் அவதாரமாகவும், மும்மூர்த்திகளின் தத்துவத்தை வெளிப்படுத்திய மகானாகவும் போற்றுகின்றனர்.
சுமார் 16 வயதில் சாய்பாபா சீரடிக்கு வந்ததாக சில வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அங்கு ஒரு வேப்பமரத்தின் கீழ் பல மணி நேரம் தியான நிலையில் அமர்ந்திருப்பதை ஊர் மக்கள் ஆச்சரியத்துடன் கவனித்தனர். இவர் யார்? ஏன் இவ்வாறு நீண்ட நேரம் தியானத்தில் அமர்ந்திருக்கிறார்? என்ற கேள்விகள் மக்களிடையே எழுந்தன.
சாய் பாபாவின் அற்புதங்கள்
சாய்பாபாவின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல ஆன்மிக அற்புதங்கள் பக்தர்களால் கூறப்படுகின்றன. வேப்பமர இலைகள்கூட அவருடைய அருளால் கசப்பு நீங்கி இனிமையாக இருந்ததாக பக்தி மரபில் கூறப்படுகிறது. பாபா தமது துவாரகாமாயியில் எண்ணெய் விளக்கேற்றுவது வழக்கமாக இருந்தது. அதற்காக அங்குள்ள வியாபாரிகள் எண்ணெய் வழங்கி வந்தனர். ஒருமுறை வியாபாரிகள் எண்ணெய் வழங்க மறுத்தபோது, சாய்பாபா தண்ணீரைக் கொண்டு விளக்கை ஏற்றியதாகவும், இந்த நிகழ்வை மறைந்திருந்து பார்த்த வியாபாரிகள் ஆச்சரியமடைந்ததாகவும் சாய்பாபாவின் பக்தி வரலாற்றில் கூறப்படுகிறது.
அன்னதானம் சாய்பாபாவின் முக்கியமான போதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் உணவு வழங்குவதை அவர் முக்கியமாகக் கருதியதாகப் பக்தி மரபில் கூறப்படுகிறது. இன்றும் பல்வேறு சாய்பாபா கோயில்களில் பக்தர்கள் உணவு, பழம் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைப் பக்தியுடன் வழங்கி வருகின்றனர்.
அனைவருக்கும் இறைவன் ஒருவனே
சீரடி சாய்பாபாவின் போதனைகளில் அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்துதல், நம்பிக்கை, பொறுமை, தர்மம், சேவை, இறை நம்பிக்கை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை வளர்ப்பது முக்கியமானதாகும். அவரது புகழ்பெற்ற போதனைகளில் "சப்கா மாலிக் ஏக்” அனைவருக்கும் இறைவன் ஒருவனே - என்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்திய மக்களின் ஒற்றுமைக்கு முக்கியத்துவம் அளித்தவராகவும், இந்து - முஸ்லிம் பக்தர்களால் போற்றப்பட்ட குருவாகவும் நம் சீரடி சாய் பாபா விளங்கினார். அவர் வாழ்ந்த மசூதிக்கு "துவாரகாமாயி" என்ற பெயரை வழங்கினார். மதம், ஜாதி ஆகிய வேறுபாடுகளைக் கடந்து அனைவருக்கும் அடைக்கலம் அளிக்கும் இடமாக சீரடி விளங்கியது.
குரு ராகு புத்தி தொடர்பு ஏற்படும்போது, ஜோதிட நம்பிக்கைகளின்படி செல்வம், குருவின் அருள், அறிவு மற்றும் ஞானம் பன்மடங்கு பெருகுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே, குரு பகவானையும் சாய்பாபாவையும் நேரடியாக ஒன்றாகக் கருதுவது அல்ல; மாறாக, இருவரின் வழிகாட்டுதல், ஞானம், நம்பிக்கை மற்றும் சரணாகதி ஆகிய தத்துவங்களை இணைத்து வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் ஆன்மிகப் பார்வையாக இதைக் கருதலாம்.
மகாராஷ்டிரத்தில் அமைந்துள்ள சீரடி, உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் வந்து சாய்பாபாவை தரிசிக்கும் புனிதத் தலமாக விளங்குகிறது. சாய்பாபாவின் திருவடிகளை நாடி சீரடிக்கு வரும் பக்தர்களின் துன்பங்களும் தடைகளும் விலகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். குறிப்பாக, அவரது வாழ்ந்த இடமான மந்திரில் தரிசனம் செய்து, அவரது திருவடிகளில் சரணடைந்தால் மனக்கவலைகள் நீங்கி அருள் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். சாய்பாபா சமாதி அடைந்திருந்தாலும், அவர் உயிருடன் இன்றும் தமது பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது. தன்னை உண்மையான நம்பிக்கையுடனும் முழுமையான சரணாகதியுடனும் அழைக்கும் பக்தர்களின் குரலுக்கு சாய்பாபா ஓடி வந்து உதவுவார்.
நம்பிக்கையும், சரணாகதியும்
"நான் உன்னை விட்டுவிடமாட்டேன்" என்ற நம்பிக்கையை அவரது பக்தர்கள் தங்கள் உள்ளத்தில் தாங்கிக் கொள்கிறார்கள். பக்தன் எந்த உணர்வுடன் அவரை அணுகுகிறானோ, அதற்கேற்ப ஆன்மிக அனுபவத்தை அவர் அருளுவார் என்பது சாய்பாபா பக்தியின் முக்கியமான கருத்தாகும். அவரது திருவடிகளில் முழுமையான நம்பிக்கையுடன் சரணடைந்தவர்களுக்கு வேண்டிய வரங்களை அருளி, வாழ்க்கையில் சரியான வழிகாட்டுதலை வழங்கும் குருவாகவும், தெய்வீக அருளின் வடிவமாகவும் சீரடி சாய்பாபா பக்தர்களால் போற்றப்படுகிறார்.
"நம்பிக்கையுடன் இருங்கள்; பொறுமையுடன் இருங்கள்; சரியான பாதையில் நடப்பதே குரு அருளை உணரும் முதல் படியாகும்.ஞ
Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.