‘ஏ’ சான்றிதழால் சிக்கலில் ஜனநாயகன்... என்ன செய்யப் போகிறார்கள் விஜய்யின் குட்டி ரசிகர்கள்?
ஜன நாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதால், விஜய்யின் குட்டி ரசிகர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பற்றி...
முதல்வர் விஜய் நடித்து நாளை திரைக்கு வரவிருக்கும் ஜனநாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதால், விஜய்யின் குட்டி ரசிகர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.
முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் பெரும் எதிர்பார்ப்புகளுடன், பல்வேறு தடைகளைத் தாண்டி நாளை (ஜூலை 23) தமிழ்நாட்டில் 1,000 திரைகளிலும், உலகளவில் 3,000 திரைகளிலும் திரையிடப்படவுள்ளது.
கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஜனநாயகன்”. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக, தமிழ்நாட்டின் இன்றைய முதல்வர் விஜய்யின் கடைசிப் படம் என்பதால், படத்தின் பூஜை போடப்பட்டதிலிருந்தே படத்துக்கு ஏகோபித்த வரவேற்பு இருந்தது. அனிருத் இசையமைத்துள்ள ஜன நாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, நாசர் எனப் பலரும் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
நிகழாண்டு ஜன. 9 ஆம் தேதி பொங்கலையொட்டி பராசக்தியுடன் ஜனநாயகன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் தெரிவித்திருந்தது. இதனை நீக்க படக்குழு முன்வராத நிலையில், தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கதால், படம் சிக்கலில் மாட்டிக்கொண்டு வெளியீடு தள்ளிப்போனது.
இதற்கிடையில், முதல்வர் வேட்பாளாராக தேர்தல் பணிகளில் விஜய் தீவிரம் காட்டியதால், ஜனநாயகன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. தேர்தலுக்கு முன், ஜனநாயகன் படம் முழுமையாக இணையத்தில் சட்ட விரோதமாக வெளியாகி அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
அதன்பின்னர், தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் முதல்வரானதால், படத்தின் வெளியீடும் வேகமெடுத்து, படத்துக்கு ஏ சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய்யின் நடிப்பில் வெளியான பகவதி படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்த நிலையில், 24 ஆண்டுகள் கழித்து விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு ‘ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.
விஜய்க்கு 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் அதிகம் என்பதால், படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது வசூலில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற கவலை எழுந்துள்ளது. ஜனநாயகன் படத்தில் அதிகளவிலான ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் இருப்பதால் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வழக்கமாக விஜய் படங்களை காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வருவார்கள்.
அஜித், ரஜினியுடன் ஒப்பிடும்போது விஜய்க்கு அதிகளவிலான குட்டி ரசிகர்கள் இருக்கின்றனர். அவர், ஒவ்வொரு வீட்டிலிருக்கும் குட்டி நண்பா, நண்பீஸை வைத்தே தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.
ஜனநாயகன் படத்தின் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஏ சான்றிதழ் பெற்றிருப்பதால் குழந்தைகள் அனுமதி உண்டா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
இதற்கு முன்னதாக, கடந்தாண்டு ரஜினி நடித்து வெளியான ‘கூலி’ படமும் ‘ஏ’ சான்றிதழைப் பெற்றிருந்தது. இதுவும் படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. மல்டிப்ளக் திரையரங்குகளில் விதிகள் கடுமையாக இருந்தாலும், சாதாரண உள்ளூர் திரையரங்குகளில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டே வருகின்றன. இதனால், ஜனநாயகனுக்கு அனுமதி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நடிகர் விஜய்யின் படங்கள் வெளியீட்டின்போது பல்வேறு பிரச்னைகளைச் சந்திப்பது ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. விஜய் வெறும் நடிகர் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் முதல்வர் என்பதாலும் விதிகளை மீறினால் பிரச்னைகளை பெரிதாக்க எதிர்க்கட்சியினர் முனைப்பு காட்டுவார் என்பதாலும் விதிமுறை கடுமையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Excitement for Vijay’s final film, Jana Nayagan, is reaching a fever pitch as the film is set for a grand worldwide release on July 23. Directed by H. Vinoth with music by Anirudh Ravichander, the film is likely to release in about 3,000 theatres worldwide, including nearly 950 screens in Tamil Nadu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.